சென்னை: வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு எழும்பூர் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் முடிவை அறிவித்தபோது இரு தரப்பினர் இடையே நள்ளிரவு கடும் மோதல் ஏற்பட்டது. இதில், தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சந்தன்பாபுவின் ஆதரவாளரான ஸ்டாலின் என்ற வழக்கறிஞரை, மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர், நீதிமன்றத்தின் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தியிருந்த காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்தார்.
அப்போது, எங்கிருந்தோ வந்த கல், அவரின் பின்பக்க மண்டையை பதம் பார்த்தது. இதனால், மூளை சிதறிய நிலையில், காருக்கு அருகில் சரிந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கொலை வழக்கில் எதிர்தரப்பைச் சேர்ந்த 17 வழக்கறிஞர்கள் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தது. முதல் குற்றவாளி மைக்கேல், 4-வது குற்றவாளி நடராஜ் மரணமடைந்துவிட்டனர். இந்நிலையில், வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பெண் வழக்கறிஞர் லோகேஸ்வரி, சார்ஸஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற 13 குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் சென்னை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் ரூ.96,000 அபராதம் விதித்து சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.