புதுக்கோட்டை: வழக்கறிஞர்கள் அவதூறாக பேசுவதாக காவல்நிலைய பதிவேட்டில் எழுதிவிட்டு, பெண் எஸ்.ஐ தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் ஒரு தம்பதியிடையே குடும்ப பிரச்னையில் மனைவி தரப்புக்கு ஆஜரான வக்கீலை அவரது கணவர் ஆபாச வார்த்தை கூறி தாக்க முயன்றதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருக்கோகர்ணம் போலீசில் வழக்கறிஞர்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் இதில் எஸ்.ஐ சங்கீதா நடவடிக்கை எடுக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2 நாட்களாக ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல், கோர்ட் புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
எஸ்.ஐ சங்கீதா பணியிடம் மாற்றம் செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறி வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், எஸ்.ஐ சங்கீதா மன உளைச்சலில், நேற்று முன்தினம் இரவு திருக்கோகர்ணம் காவல் நிலைய பதிவேட்டில், ‘தனது தற்கொலைக்கு வழக்கறிஞர்களின் அவதூறு பேச்சு தான் காரணம், எனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது’ என்று எழுதி வைத்துவிட்டு புதுகை அருகே மேட்டுப்பட்டியில் உள்ள வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கணேஷ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* போலீஸ் ஏட்டு தற்கொலை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடக்கார மூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (39). ஆயுதப்படை போலீஸ் ஏட்டு. இவரது மனைவி ஆர்த்தி. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆர்த்தி கோபித்துக் கொண்டு கொள்ளிடத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. இதில் மனமுடைந்த ஆனந்தன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் மதுவில் விஷம் கலந்து அருந்திவிட்டு மயங்கி விழுந்தார். உறவினர் ஒருவர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆனந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.