திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் அம்பேத்கரின் படம் அகற்றியதை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரின் படத்தை அகற்ற வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. திருக்கழுக்குன்றத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சுற்றறிக்கையின்படி, அம்பேத்கரின் படம் அகற்றப்பட்டது.
இதனை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், இந்த செயலை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் வெளியே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. வழக்கறிஞர்களின் இந்த புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.