பெரம்பூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 51வது தெருவை சேர்ந்தவர் லிண்ட்சே அருள்கனி (40). உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். தனியார் அறக்கட்டளையின் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.11 லட்சத்தை தனது வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த பணத்தில், ரூ.10 லட்சம் மற்றும் ஒன்றரை சவரன் நகை மாயமானது தெரிந்தது. ஆனால், வீட்டு கதவின் பூட்டு மற்றும் பீரோ பூட்டு ஏதும் உடைக்கப்படாமல், பணம், நகை மட்டும் திருடுபோயிருந்தது.
இதுகுறித்து லிண்ட்சே அருள்கனி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது வீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், வேலை செய்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.