சென்னை: வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வில்சன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாத்தர் தமது கட்சிக்காரருக்கு கொடுத்த சட்ட ஆலோசனைக்காக, மும்பையில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது, வழக்கறிஞர்- கட்சிக்காரர் இடையேயான ரகசிய உரையாடல் உரிமையையும், தங்கள் தொழில்முறை செயல்களில் வழக்கறிஞர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பையும் எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகும்.
அடுத்து என்ன? அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த நீதிபதிகளுக்கு சம்மன் அனுப்பப் போகிறார்களா? குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப் போகிறார்களா? குற்றச்சாட்டை முன்வைக்கும் அமைப்பானது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட ஆலோசனை வழங்கும் ஒரு வழக்கறிஞருக்கு, சம்மன் அனுப்பும் என்றால், அது தனது கட்சிக்காரரை சட்டபூர்வமாக பாதுகாப்பதில் இருந்து அந்த வழக்கறிஞரை அச்சுறுத்தும் முயற்சியாகும்.
மேலும், இது குற்றம் சாட்டப்பட்டவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி மற்றும் விசாரணைக்கான அணுகல் போன்ற அடிப்படை உரிமைகளை சிதைக்கிறது. அப்படியெனில், இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் அடையாளமாகும், ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல.அமலாக்கத் துறையானது அரவிந்த் தாத்தர்க்கு அனுப்பிய சம்மன்களை திரும்பப்பெற்றுவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. ஆனால் எனக்கு கிடைத்த தகவல்படி அரவிந்த் தாத்தர்-க்கு சம்மன்களை திரும்பப்பெறுவது தொடர்பாக அமலாக்கத்துறையால் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் கூறப்படவில்லை..
இந்த சூழ்நிலையில், சம்மன் அனுப்பிய அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பும் விவகாரத்தில் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை அமலாக்கத்துறை தனது அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். இது நமது தொழில் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் என்ற வகையில் இந்திய பார் கவுன்சில் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பார் அசோசியேஷன்களும் இவ்விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அமலாக்கத்துறை என்பது சட்டத்தை விட உயர்ந்தது அல்ல.. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்