Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்; மம்தா அரசுக்கு எதிராக கொதித்த பாஜகவினர் கைது: காங்கிரஸ், மா.கம்யூ கட்சிகளும் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா: சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில் மம்தா அரசுக்கு எதிராக கொதித்த பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ், மா.கம்யூ கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தின. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் கடந்த 25ம் தேதி, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, மனோஜித் மிஸ்ரா என்ற முக்கிய குற்றவாளி உட்பட ஜைப் அகமது, பிரமித் முகோபாத்யாய் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கை விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, குற்றம் நிகழ்ந்த விதத்தை காவல்துறையினர் நடித்துக் காட்டச் செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியும், முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரியும் பாஜகவினர் லால்பஜார் பகுதியில் நேற்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்ட பல தலைவர்களையும், தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆனால், சுகந்தா மஜும்தார் காவல்துறை ஜாமீனில் வெளிவர மறுத்து இரவு முழுவதும் சிறையிலேயே இருக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். கைது செய்யப்பட்ட தங்கள் தலைவருக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்தால் பின்பற்ற வேண்டிய விதிகளை காவல்துறை மீறிவிட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட உண்மையறியும் குழுவை பாஜக தேசியத் தலைமை அமைத்துள்ளது. பாஜகவைத் தவிர, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த சம்பவத்தைக் கண்டித்து தனித்தனியே போராட்டங்களை நடத்தியுள்ளன.

பாஜகவை போல் மாலை போட மாட்டோம்;

சட்டக் கல்லூரி பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாகவும், பெண் ஒருவர் முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் பாஜக கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ‘இந்த வழக்கில் விசாரணை போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது. 12 மணி நேரத்திற்குள் அனைத்து குற்றவாளிகளையும் கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எங்களது அரசு ஒருபோதும் மன்னிக்காது. பாலியல் குற்றவாளிகளையும், கொலையாளிகளையும் மாலை அணிவித்து பெருமைப்படுத்தும் பாஜகவைப் போல நாங்கள் அல்ல’ என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.