சென்னை: சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பேணி காப்பதால்தான் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குவதாக எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை, தலைமைச்செயலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் தொடர் தோல்வி காரணமாக தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல. கலை மற்றும் அறிவு மாநிலமாகும். சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலமாக திகழ்வதுதான் தமிழ்நாடு என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்துகொள்ள வேண்டும்.
கொடநாடு சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அவரது ஆட்சி காலத்தில்தான் நடந்தேறின. அது அவரது ஆட்சியின் திறன்மையின்மையை காண்பிக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் அளவிற்கு எந்த ஒரு சம்பவங்களும் நடைபெறவில்லை. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த குற்றச்சம்பவங்களுக்கு முன்விரோதம்தான் முக்கிய காரணமே தவிர அரசாங்கம் அல்ல. அதனை தடுப்பதற்குதான் ரவுடிகளின் பட்டியலை கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதன்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏ பிளஸ் ரவுடிகள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல், முன்னாள் குற்றவாளிகளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, சிறார் சீர்த்திருத்த பள்ளிகளில் இருந்து வரக்கூடிய சிறுவர்களையும் முழுவதுமாக திருத்தி, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்து தான் வெளியில் அனுப்புகிறோம். காவல்துறையினரின் சிறப்பான செயல்பாடுகளால்தான் குற்றங்களும் குறைந்து வருகின்றன.
முதல்வரின் உத்தரவின்படி காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் தமிழக சிறைச்சாலைகளில் தற்போது 97 சதவீதம் குற்றவாளிகளால் நிரம்பி உள்ளது. கிளைச்சிறைச்சாலைகளை மூடுவதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். அவ்வாறு மூடவேண்டும் என இதுவரை கூறவில்லை. அரசியல் கட்சி தலைவர்களை பொறுத்தவரை தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்கும்பட்சத்தில் கட்டாயம் செய்து தரப்படும். ஆணவப்படுகொலைகளை இந்த அரசு என்றைக்கும் ஆதரித்தது இல்லை.
அவ்வாறு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பேணி காப்பதால்தான் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் இந்த விவகாரங்களை வேறுவிதமாக திசைத்திருப்பி தமிழகத்தை பின்னோக்கி தள்ளலாம் என கனவு காண்கின்றனர் அவர்களிடைய கனவு நிச்சயம் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.