அம்பத்தூர்: சென்னை கோயம்பேடு சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி இவரது மகன் ஸ்ரீ ராஜா (24) சட்ட கல்லூரி மாணவர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஸ்ரீ ராஜா கோயம்பேடு பகுதியில் இருந்து ரெட்டேரி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செந்தில் நகர் பேருந்து நிலையம் அருகே 200 அடி சாலையில் பின்னால் வந்த லாரி ஸ்ரீ ராஜா ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் ஸ்ரீ ராஜாவின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீ ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரி டிரைவரான கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் (40) என்ற நபரை கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்திலிருந்து காய்கறிகளை ஏற்றி கோயம்பேடு பகுதியில் இறக்கிவிட்டு திரும்பி செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.