சென்னை: சென்னையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார் அமித் ஷா. அமைதியாக இருக்கும் மாநிலத்தில் கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை கெடுக்க பார்க்கிறார் அமித் ஷா. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை அமித்ஷா விரும்பவில்லை. மதவாத பிளவை வேண்டுமென்று உருவாக்கி கலவரத்தை உருவாக்க பார்க்கிறார். அமித் ஷாவின் பேச்சை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் விரும்பபோ ஏற்கவோ மாட்டார்கள்.
அமித்ஷாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தமிழ்நாட்டுக்கு முந்தைய ஆட்சியை விட அதிக நிதி ஒதுக்கியதாக அமித் ஷா கூறியிருப்பது தவறானது. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டுக்கும் தற்போதைய அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட்டுக்கும் வேறுபாடு உள்ளது. பாஜகவின் எந்தவித மத அரசியலும் பிளவுவாத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. திமுகவிற்கு அச்சப்பட்டுதான் தமிழ்நாட்டுக்கு வந்து அமித்ஷா பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள நற்பெயரால் அச்சமடைந்துதான் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். 98.5 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது பற்றி நேருக்கு நேர் விவாதிக்க அமித் ஷா தயாரா? திராவிட இயக்க சித்தாந்தம் உள்ளவரை தமிழ்நாட்டில் பாஜகவால் வெல்ல முடியாது. அமித் ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவுபடுத்தும் சூது. தென் மாநிலங்களின் ஒப்புதல் இன்றியே எந்த மசோதாவையும் சட்டமாக்கும் வகையில் சதி நடக்கிறது. தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பேசவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை கடுமையாக எதிர்த்த பாஜக திடீரென ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது உள்நோக்கம் கொண்டது.
தமிழ், தமிழ் என்று ஒன்றியம் உள்துறை அமைச்சர் பேசும்போது கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட மறுப்பது ஏன்? கீழடி ஆய்வறிக்கையை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு திருப்பி அனுப்புவது ஏன்?, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் பாஜகவினர் நிரூபித்துள்ளனர். வட இந்தியாவில் பல மாநிலங்களில் புழக்கத்தில் இருந்த மொழிகளை பாஜக அரசு அழித்துவிட்டது. பல மொழிகளை அழித்து வட இந்தியாவில் இந்தியை பரப்புகின்றனர். மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன்? மணிப்பூர் கலவரம் குறித்து பேசாமல் இருப்பதற்காக பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும்.
மணிப்பூரில் உள்ள நிலைமை பற்றி பேசாமல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதா? ஒடிசாவில் தமிழர் உங்களை ஆளலாமா என்று பேசிய அமித் ஷா, தற்போது தமிழ் மீது பற்று உள்ளதுபோல் பேசுகிறார். கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா திரும்ப திரும்ப கூறுவது குறித்து பழனிசாமிதான் பதில் கூற வேண்டும். எதிர் அணி எத்தகைய கூட்டணி அமைத்தாலும் அதனை திமுக கூட்டணி எதிர்கொண்டு வெற்றிபெறும். தன்னால் தமிழ்நாட்டில் எதையும் செய்யமுடியாது என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார் அமித் ஷா. தேசிய அளவில் குற்றங்கள் மிகவும் குறைவாக நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எந்த ஷாக்கள் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.
திமுக ஆட்சியை ஆளுநராக இருந்த கே.கே.ஷா கலைத்தபோதும் நாங்கள் அவரிடம் மண்டி போடவில்லை. அவசர நிலையை ஆதரித்தால் 2 ஆண்டு பதவி நீட்டிப்பு தருவதாக கூறியும் அதனை கலைஞர் ஏற்கவில்லை என்று கூறினார்.