சென்னை: மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் முரசொலி மாறனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மறைந்த முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் திமுகவினரால் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, ஜி.கருணாநிதி, மாவட்ட செயலாளர் சிற்றரசு, முரசொலி செல்வம், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பகுதி செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, மதன்மோகன், சென்னை தென் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரிதா தங்கம், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பொன்னேரி அன்புவாணன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள்-இந்நாள் எம்பி, எம்எல்ஏக்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, ஆதி திராவிடர் நலக்குழு, மீனவர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப்பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள்-நிர்வாகிகள், சார்பு மன்றம், படிப்பகங்களைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் திமுக தோழர்கள் என ஏராளமானோர் முரசொலி மாறன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல, முரசொலி வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் உருவச்சிலைக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவரும், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம், சங்க பொருளாளர் டாக்டர் எஸ்.நசீம், துணைப்பொதுச்செயலாளர் க.இளங்கோவன், கறம்பக்குடி வி.ராஜு மற்றும் சங்க நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மாநிலம் முழுவதும் திமுக கட்சி அலுவலகங்களில் முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
* முரசொலி மாறன் படைப்புகள் அறிவுப் புதையல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘கலைஞரின் மனசாட்சி” ஆகவும், டெல்லியில் கழகத்தின் முகமாகவும், பின்னாளில் உலக அரங்கில் இந்தியா மட்டுமல்லாது அனைத்து வளரும் நாடுகளின் குரலாகவும் மிளிர்ந்த முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் இன்று (நேற்று).‘‘ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?”, ‘‘திராவிட இயக்க வரலாறு”, ”மாநில சுயாட்சி” என அவர் படைத்தளித்த ஆக்கங்கள் கழகத்தின் அறிவுப் புதையலாகத் திகழ்கின்றன. இறுதிவரை கொள்கை முரசமென ஒலித்த முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று அவருக்கு நன்றி செலுத்துவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
* தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை
திருவாரூர் காட்டூரில் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் உள்ள முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும், கொரடாச்சேரி திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான சேகர் (எ) கலியபெருமாள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருக்குவளை: நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தில் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கவுதமன் தலைமையில் திமுகவினர், முரசொலி மாறன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை வகித்து முரசொலி மாறன் உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், முரசொலி மாறன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். மேயர் சத்யா வரவேற்றார். உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று, முரசொலி மாறனின் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பஸ் நிலையம் எதிரில் முரசொலி மாறன் படத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல திண்டிவனத்தில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் முரசொலி மாறன் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.