மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்த உணர்வு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமே முதன்மையானது. ஆனால் மகிழ்ச்சி பணத்தில் இருக்கிறது, புகழில் இருக்கிறது என்றெல்லாம் நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.நினைத்ததை அடையும் போதுஏற்படுகின்ற மகிழ்ச்சி தேவை முடிந்ததும் காணாமல் போய்விடுகின்றது. இலட்சியக் கனவுகள் மட்டுமே நிரந்தரமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஒரு அரசன், ஜென்துறவியை தேடி வந்தான். உங்களால் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எப்படி முடிகிறது என்று கேட்டான். ஜென் துறவி சிரித்துக் கொண்டே, நான் அரசனாக இருப்பதால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.அரசனுக்கு ஒரே குழப்பம் நான் தானே இந்த நாட்டுக்கு அரசன். இந்தத் துறவி தன்னை அரசன் என்கிறாரே! என்று நினைத்தான். அவனது எண்ணத்தை புரிந்துகொண்ட துறவி, எனக்கு நான் ராஜாவாக இருக்கிறேன்.என்னை நான் ஆட்சி செய்கின்றேன். எனக்கு எது மகிழ்ச்சியை தருமோ, அதை மட்டுமே எனக்குள்ளே அனுமதிக்கின்றேன்.என் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருப்பவை எதையும் எனக்குள் ஒருபோதும் அனுமதிப்பதே இல்லை என்றார்.
வர்க்க பேதங்கள் தகர்ந்து, எல்லோரும் எல்லாமும் பெறும் சமத்துவ நிலை அடைய போராட்டமே சிறந்த தீர்வு என்று காரல் மார்க்ஸ் நம்பினார். அதனால்தான் எது உண்மையான மகிழ்ச்சி தரக்கூடியது என்று மக்கள் அவரிடம் கேட்ட போது ‘போராட்டம்’ என்று அவரால் பதில் சொல்ல முடிந்தது.ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயம் அவர்கள் கொண்டிருக்கும் விருப்பத்தைப் பொறுத்து மாறுகிறது. வள்ளலாருக்கு மக்களின் பசியைப் போக்குவது மகிழ்ச்சியை கொடுத்தது. துன்பத்துக்கு காரணமான ஆசையை மக்கள் துறப்பது புத்தருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. உங்களுக்கு எது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அதில் ஈடுபடுங்கள். வாழ்க்கை அழகாகும் வெற்றி வசமாகும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையை சொல்லலாம்.
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் வசிக்கும் லிசா கெல்லிக்குச் சின்ன வயதிலிருந்தே வித்தியாசமான விருப்பங்கள், சாகச விளையாட்டுக்கள், சாகசப் பயணங்கள் மீது ஆர்வம் வந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை, பனி சூழ்ந்த அலாஸ்காவில் வாழ்வதே ஒரு சாகசம்தானே!கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, நண்பனின் வீட்டில் ஒரு டிரக்கைப் பார்த்தார். அந்த டிரக் அவருக்கு ஏதோ சொல்வதுபோல் இருந்தது. தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தார். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, டிரக் டிரைவராகப் பயிற்சி பெற்றார்.டிரக் ஓட்டுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. உடலளவில் பலமான ஆண்களைப் போல இரண்டு மடங்கு சக்தியையும் இரண்டு மடங்கு உழைப்பையும் கொடுக்க வேண்டும். எனக்குப் பிடித்த வேலை என்பதால் ஒருபோதும் அலுத்துக்கொள்வதே இல்லை என்கிறார் லிசா.
பயிற்சி பெற்றாலும் டிரக் டிரைவர் வேலை லிசாவைத் தேடி வரவில்லை. ஓல்லியான இளம்பெண், கடினமான டிரக்கை எப்படி ஒட்ட முடியும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. பள்ளிப் பேருந்து ஓட்டுநர், பீட்ஸா டெலிவரி என்று கிடைத்த வேலைகளை செய்து கொண்டிருந்தார் லிசா.பிறகு ஒரு டிரக் கம்பெனியில் வேலை கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது நம்பிக்கை வந்தது. சரக்குகளை ஏற்றி நீண்ட தூரத்துக்குச் சென்று சேர்க்கும் பணியை திறம்படச் செய்தார் லிசா.டிரக் ஓட்டுநர்களில் அன்று பெண்கள் இல்லாததால் அதிக கவனம் பெற்றார் லிசா. ஹிஸ்டரி சானலில் உலகின் ஆபத்து நிறைந்த சாலைகளிலும், பனி நிறைந்த பாதைகளிலும் பயணம் செய்யக்கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க லிசாவுக்கு அழைப்பு வந்தது. தன் திறமைக்கு கிடைத்த சவாலாக அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் லிசா.
பாலைவனம், பனி பிரதேசம், மலைப்பாதை என்று ஒவ்வொரு சீசனும் வித்தியாசமான அனுபவத்தை தந்தது. ஆள் அரவமற்ற பனி சூழ்ந்த பாதையில் பயணம் செய்வது ஆபத்தைக் கூடவே அழைத்துச் செல்வதைப் போன்றது. திடீரென்று பனி உடைந்தால், டிரக்கோடு தண்ணீரில் மூழ்கி மடிய வேண்டியதுதான். பரிசோதித்துக் கொண்டே எடை மிகுந்த டிரக்கை ஓட்ட வேண்டும். அதேபோல இமயமலைப் பகுதியில் பயணம் செய்ததையும் என்னால் மறக்கவே முடியாது. மிகக் குறுகலான, ஆபத்தான மலைப்பாதைகள் கொஞ்சம் கவனம் நமக்குத் தப்பினாலும் எதிரில் வருபவருக்குத் தப்பினாலும் பாரபட்சம் இன்றி சாவைச் சந்திக்க வேண்டியதுதான். பயணமே பெரிய சவாலாக இருப்பதால் உணவு, மொழி, தட்பவெப்பம் எல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார் லிசா.
ஆண்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்தத் துறையில் உங்களுக்கு எத்தகைய வரவேற்பு உள்ளது என்று லிசாவிடம் கேட்கும்போது, எந்தத் துறையாக இருக்கட்டும், பெண்களை இழிவாக நினைக்கும் ஆண்களும் இருக்கவே செய்வார்கள். நான் இவ்வளவு பிரபலமான பிறகும் கூட, ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் காதுகொடுத்துக் கேட்க முடியாத அளவிற்கு திட்டுகளை சந்தித்தேன்.நேரில் ஒரு மாதிரி பேசுவார்கள், முகத்துக்குப் பின்னால் கீழ்த்தரமாகப் பேசுவார்கள். இவர்களை நான் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை, அதனாலதான் இந்தத் துறையில் என்னால் சாதிக்க முடிந்தது என்கிறார் லிசா.
கணவரை நீண்ட காலம் பிரிந்து இருப்பதுதான் கஷ்டமான விஷயம் என்றாலும் அதைவிட கஷ்டமானது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக டிரக் ஓட்டுவது தான் என்கிறார்கள் லிசா. மோட்டார் கிராஸ் சாம்பியனான லிசாவுக்கு ஸ்கை டைவிங், ஹாண்ட் க்ளைடிங், ஸ்நோ போர்டிங், குதிரை ஏற்றம் போன்ற சாகச விளையாட்டுகளும் தெரியும். தன்னுடைய பயண அனுபவங்களை தொடர்ந்து எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.இந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்காது. அதை நேர்மையாகவும், மகிழ்ச்சியாகவும் விரும்பியதைச் செய்ய முடிந்ததாகவும் மாற்றிக் கொண்டால் வாழ்க்கை இனிமையானது! நானோ, என் நிகழ்ச்சிகளுகளோ, என் எழுத்துகளோ மற்றவர்களுக்கு சுவாரசியமாக இருந்தால் மகிழ்ச்சி. என்னைப் பார்த்து யாராவது உத்வேகமும் தன்னம்பிக்கையும் பெற்றால் அதைவிடச் சிறந்த விஷயம் இந்த உலகில் எதுவுமில்லை என்கிறார் லிசா. இவரைப்போல உங்களுக்கு எது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அதில் ஈடுபடுங்கள். வாழ்க்கை அழகாகும், இலட்சிய கனவு நிறைவேறும்,வெற்றி வசமாகும்.