சென்னை: சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 01.01.2023 முதல் 06.09.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 259 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 65 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 49 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி, பாலியல் தொழில் நடத்திய 8 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 3 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 386 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் கடந்த 29.08.2023 முதல் 06.09.2023 வரையிலான 9 நாட்களில் 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் 1.பாலமுருகன் (எ) மதுரைபாலா, வ/32, த/பெ.மூர்த்தி, தன்னேரி தெரு, பல்லாவரம், சென்னை என்பவர் கடந்த 09.08.2023 அன்று வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, J-9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும் 2.நவீன்குமார், வ/23, த/பெ.சீனிவாசன், மூம்மூர்த்தி கோயில் தெரு, அகலூர், விழுப்புரம் மாவட்டம் என்பவர் 17 வயது கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்து கத்தியால் தாக்கி கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதற்காக W-31 புனித தோமையர்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், 3.ஜஸ்பீர் சிங் ஆனந்த், வ/35, த/பெ.குர்பீர் சிங் ஆனந்த், 20வது லேன், 4வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை என்பவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக N-3 முத்தியால்பேட்டை காவல் நிலையத்திலும், 4.சுந்தர், வ/56, த/பெ.பாபு, தேவி மீனாட்சி நகர், இராஜாஜிபுரம், திருவள்ளூர் மாவட்டம் என்பவர் மடிப்பாக்கம் பகுதியில் சுமார் 2 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த குற்றத்திற்காக, மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி புலனாய்வு பிரிவிலும், வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் 5.மகேஷ் (எ) குள்ள மகேஷ், வ/33, த/பெ.முனுசாமி, கேசவன் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவர் கடந்த 18.08.2023 அன்று கத்தியைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டிய குற்றத்திற்காக, H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் பாலமுருகன் (எ) மதுரைபாலா என்பவரை கடந்த 31.08.2023 அன்றும், நவீன்குமார், ஜஸ்பிர்சிங்ஆனந்த் மற்றும் சுந்தர் ஆகியோரை கடந்த 02.09.2023 அன்றும் மகேஷ் (எ) குள்ள மகேஷ் என்பவரை கடந்த 05.09.2023 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், மேற்படி 5 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.