சென்னை: துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 326 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக தாழ்வாக பறந்தது. அப்போது, பரங்கிமலை பகுதியில் இருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமான, உடனே விமானத்தை உயரத்தில் பறக்கச் செய்தார். மேலும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு லேசர் லைட் அடிக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீசாருக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடர் கருவி மூலம் லேசர் லைட் எங்கிருந்து அடிக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட் சில வினாடிகளில் மறைந்தது. இதையடுத்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பாதுகாப்பாக சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கியது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலைய போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்சியாக நடந்த நிலையில், தற்போது மீண்டும் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.