மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்றிரவு 326 பயணிகளுடன் தரையிறங்கிய துபாய் விமானத்தின்மீது திடீரென மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தை சாமர்த்தியமாக செயல்பட்டு விமானி பத்திரமாக தரையிறக்கினார். இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசார் விசாரணை நடத்தி, லேசர் ஒளி வீசிய மர்ம நபரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்துக்கு நேற்றிரவு துபாயிலிருந்து 326 பயணிகளுடன் எமிரேட்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் சென்னையில் தரையிறங்குவதற்காக, அதன் வேகத்தை படிப்படியாக குறைத்து, தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. அச்சமயத்தில், சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து திடீரென பச்சை நிறத்தில் சக்திவாய்ந்த லேசர் ஒளிவீச்சு, தரையிறங்கும் நிலையில் இருந்த துபாய் விமானத்தின்மீது வேகமாக பீய்ச்சியடித்தது.
இந்த திடீரென பச்சைநிற லேசர் ஒளிவீச்சால் விமானி சற்று நிலைகுலைந்தாலும், சில விநாடிகளில் சுதாரித்து, தாழ்வாக பறந்த விமானத்தை மேலும் உயரத்தில் பறக்க செய்துள்ளார். இதுபற்றி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் விமானி அவசர தகவல் தெரிவித்தார். மேலும், விமானம் தரையிறங்குவதற்கு இடையூறு செய்வது போல், அதன்மீது லேசர் ஒளி பீய்ச்சி அடிக்கப்படுகிறது என்று விமானி புகார் அளித்தார். இதுகுறித்து விமான பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமானநிலைய போலீசாருக்கு விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடர் கருவிகள் மூலம் அந்த லேசர் ஒளி எங்கிருந்து வந்தது என்பதை ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அந்த லேசர் ஒளிவீச்சு திடீரென நின்றுவிட்டது.
இதையடுத்து, துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் சென்னையில் தரையிறங்க வந்த அனைத்து விமானங்களும் எவ்வித பிரச்னையுமின்றி பத்திரமாக தரையிறங்கின. இப்புகாரின்பேரில் சென்னை விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமானத்தின்மீது பச்சைநிற லேசர் ஒளி பீய்ச்சியடித்த மர்ம நபரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இதுபற்றி பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கிய அனைத்து விமானங்களின்மீது லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தன.
இதுகுறித்து இந்திய விமானநிலைய ஆணையமும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், இதுதொடர்பாக பழவந்தாங்கல், பரங்கிமலை பகுதியில் 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் விளையாட்டாக லேசர் ஒளி அடித்தோம் என்று கூறி மன்னிப்பு கேட்டனர். அவர்களிடம் இருந்து லேசர் லைட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு நேற்றிரவு மீண்டும் அதேபோல் விமானத்தின்மீது லேசர் ஒளி அடிக்கும் சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.