கிருஷ்ணகிரி: வெல்டிங் செய்தபோது டீசல் டேங்க் வெடித்ததில் லாரி அதிபர் பரிதாபமாக பலியானார். கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள தொன்னையன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (45). இவர் கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோயில் எதிரே, வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே சுண்டேகுப்பம் பாறைக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரியப்பன் (51). இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று இவருக்கு சொந்தமான லாரியை, வெல்டிங் பணிக்காக, பழனியின் பட்டறைக்கு கொண்டு வந்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில், லாரியின் டீசல் டேங்க் அருகே, பழனி வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ஆரியப்பனும் உடனிருந்தார். அந்த நேரத்தில், திடீரென டீசல் டேங்க் வெடித்துச் சிதறியது. இதில், ஆரியப்பன் தூக்கி வீசப்பட்டு, கால் துண்டாகி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த பழனியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், ஆரியப்பன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.