Friday, February 23, 2024
Home » தமிழகத்தில் 2வது பெரிய மார்க்கெட் மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ₹30 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

தமிழகத்தில் 2வது பெரிய மார்க்கெட் மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ₹30 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

by Lakshmipathi

*குவிண்டால் ₹9 ஆயிரத்துக்கு விற்பனை

திருப்பத்தூர் : தமிழகத்தில் 2வது பெரிய மார்க்கெட்டாக விளங்கும், மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் நேற்று ₹30 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. இதில், குவிண்டால் ₹9 ஆயிரத்துக்கு விற்பனையானது.திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி ஏலம் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு 2வது முறையாக பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி, வாலாஜா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்து வந்த 500 மூட்டைகள் பருத்தி ஏலத்தில் வைக்கப்பட்டது.

இந்த ஏலத்தை கூட்டுறவு சங்க தலைவர் தேவராசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருப்பூர், சென்னிமலை, கோவை, அவிநாசி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நூல் மில் உரிமையாளர்கள் போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்தனர்.இதில், ஆர்சிஎச் பருத்தி குவிண்டால் ₹8,400 முதல் ₹9,000 வரை ஏலம் போனது. அதன்படி, நேற்று ₹30 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்று, உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

இதுகுறித்து மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவராசன் தெரிவித்ததாவது:திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையும் பருத்தி அனைத்தும் மண்வளத்தினால் அதிக தரமுள்ள பருத்தியாக உள்ளது. இந்த பருத்தி தமிழகத்திலேயே 2வது பெரிய பருத்தி மார்க்கெட்டான மாடப்பள்ளி பருத்தி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு, ஏராளமான பருத்தி நூல் மில்கள் மற்றும் பல்வேறு அயல் நாடுகளுக்கு சென்றடைகிறது.

இங்கு ஆண்டுதோறும் பருத்தி மார்க்கெட் ஏலம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 44 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக இந்த சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கடந்த ஆண்டு ₹9 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.இந்த ஆண்டு ₹15 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான ஏலம்விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி சாகுபடி தற்போது குறைந்துள்ளது.

விவசாயிகள் நல்ல மகசூல் வரும் என்று நினைத்து பருத்தி பயிரிட்டனர். ஆனால், எதிர்பார்த்த அளவில் மகசூல் இல்லை.இருந்தாலும் திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமில்லாமல் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்தும் பருத்தி வரத்து இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிரிட்டு கொண்டு வரும் பருத்தியை மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கம் சார்பில் ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வாரந்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதில், கூட்டுறவு சங்க செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் தலைவர் சாமிகண்ணு, ஒன்றிய கவுன்சிலர் ரகு கஸ்தூரி, முன்னாள் தலைவர் சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi