சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் கின்னோர் மாவட்டத்தின் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதே போன்று, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், கின்னோர் மாவட்டத்தில் நெகுல்சாரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், 300 மீட்டர் சாலை நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், ஆப்பிள் கொண்டு செல்லும் ஏராளமான சரக்கு வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்தை மீண்டும் தொடங்கவில்லை என்றால், ஆப்பிள்கள் அழுகும் அபாயநிலை ஏற்படும் என்று அவற்றை உற்பத்தி செய்த விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.