கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய குஞ்சப்பனை பகுதியில் இன்று அதிகாலை 5 இடங்களில் லேசான மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு கோத்தகிரி போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சென்று சாலையில் விழுந்துள்ள மண், கற்கள், மரங்களை அகற்றும் பணியில் 4 மணி நேரமாக ஈடுபட்டனர்.
இதனால், காலை முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மற்றும் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பாதிப்படைந்தனர். மேலும் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான இடங்களை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த பாதிப்பு காரணமாக நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு லாரிகள், அரசு பேருந்துகள் சாலையில், இருபுறமும் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நின்றன.