சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் பைராகர்க்கில் இருந்து திசாவுக்கு 11 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த வேன் சம்பா மாவட்டத்தின் சவுரா பகுதியில் உள்ள தார்வை பாலம் அருகே வந்த போது, நிலச்சரிவு ஏற்பட்டதில் சியுல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.
மேலும் 4 பேர் காயமடைந்தனர். இத்துயர சம்பவத்திற்கு முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டார். இது பற்றி விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.