திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் 2 உடல் பாகங்கள் கிடைத்தன. வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் 2 வாரங்கள் நிறைவடைந்தன. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 435ஐ தாண்டிவிட்டது. இன்னும் 130க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால் அவர்களது உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களாக மீட்புப் படை மற்றும் சமூக சேவகர்களுடன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வசித்தவர்களும் சேர்ந்து உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடைத்து வருகின்றன. நேற்று ஆனயடிக்காப்பு என்ற இடத்தில் 2 உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. இவை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இன்று இவை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கிடையே இதுவரை அடையாளம் காணப்படாத 100க்கும் மேற்பட்ட உடல்கள் மற்றும் உடல் பாகங்களின் டிஎன்ஏ முடிவுகள் கிடைக்கத் தொடங்கி விட்டது என்று கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜன் கூறினார். இன்னும் ஒரு சில தினங்களில் அனைத்து உடல்களின் டிஎன்ஏ முடிவுகள் கிடைத்துவி டும் என்றும், அதன் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.