மார்த்தாண்டம்: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10.5 கோடி மதிப்பில் 100 வீடுகள் கட்டித் தருவதாக வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கேரள முதல்வரை சந்தித்து உறுதி அளித்தனர். கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து நிவாரண நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் மண்டல தலைவர் வைகுண்டராஜன், மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக் அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள முதல்வர் பிணராய் விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்து நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினர்.
மேலும் வயநாட்டில் ஒரு வீட்டிற்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 100 வீடுகள் அதாவது ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டி தருவதாக உறுதி அளித்தனர். இதற்கான இடம் மற்றும் அனுமதி அளித்தால் பணி தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.