திருப்பூர்: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவிநாசியில் இருந்து 5 ஆயிரம் சப்பாத்திகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தன்னார்வலர்கள் அனுப்பி வைத்தனர். கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 380க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தன்னார்வலர்கள் இணைந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சப்பாத்திகளை தயார் செய்து தனித்தனி பாக்கெட்டுகளாக கட்டி பெட்டிகளில் அடுக்கி நேற்று இரவு வயநாட்டிற்கு வேனில் அனுப்பி வைத்தனர். இது மட்டுமல்லாது அத்தியாவசிய தேவைகளான டூத்பேஸ்ட், பிஸ்கட், சோப், போர்வை உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.