சிவகங்கை: நிலமோசடி வழக்கில் பத்திர பதிவு துணைப்பதிவாளரை போலீசார் கைது செய்தனர். மதுரை, தெற்கு வீதி சப்பாணி கோவில் பகுதியில் வசிப்பவர் விக்னேஷ் (53). இவருக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியில் நிலங்கள் உள்ளன. கடந்த 2020, டிசம்பரில் திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூரை சேர்ந்த ஒருவர், விக்னேஷ் என்ற பெயரில் அந்த இடத்தை திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதே ஊரை சேர்ந்த குமாருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். குமார் அந்த இடத்தை தனது தம்பி இளையராஜா, அவர் மூலம் வேறு சிலருக்கும் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த விக்னேஷ், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கடந்த 2021ல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அம்மைநாயக்கனூரை சேர்ந்த விக்னேஷ், குமார், இளையராஜா, மீனாள், சதீஷ்குமார், நந்தினி, சந்திரசேகர், சித்ரசேனன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும், இவ்விவகாரத்தில் திருப்புவனம் பத்திர பதிவு அலுவலகத்தில் துணைப்பதிவாளராக இருந்த ராமச்சந்திரனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். துணைப்பதிவாளர் ராமச்சந்திரன் ஏற்கனவே துறை ரீதியிலான நடவடிக்கையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.