பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மூடா மாற்று நிலம் வழங்கிய முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கார்கே உள்பட பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) கையகப்படுத்தியதற்காக 2021ம் ஆண்டு அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது.
மைசூரு புறநகர்ப்பகுதியை மேம்படுத்துவதற்காக புறநகர்ப் பகுதியில் கையகப்படுத்திய இடத்திற்கு மாற்றாக, நகரின் முக்கிய, ஆடம்பர பகுதியில் முறைகேடாக மாற்று நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாக பாஜ குற்றம்சாட்டியது. இதில் தனது பங்களிப்பு இல்லையென்றும், தன் மனைவிக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது பாஜ ஆட்சியில் தான் என்றும் பல முறை விளக்கமளித்த முதல்வர் சித்தராமையா, நியாயமான முறையில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் அதுதொடர்பான ஆவணங்களும் முதல்வர் தரப்பில் வெளியிடப்பட்டது. ஆனாலும் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூருவில் 14 இடங்களில் மாற்று நிலம் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.40 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கடந்த மாதம் லோக் ஆயுக்தா போலீசிடம் அளித்த புகாரில் டி.ஜே.ஆபிரகாம் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக முதல்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டு சமூக ஆர்வலர்கள் பிரதீப் குமார், டி.ஜே.ஆபிரகாம், கிருஷ்ணா ஆகியோர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து, 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உங்கள் (சித்தராமையா) மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது என கேட்டும் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆளுநர் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். முதல்வர் சித்தராமையா ஆளுநரிடம் பதிலளித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சரவை கூடி, முதல்வருக்கு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், அதனால் அந்த நோட்டீஸை திரும்பப்பெற வேண்டும் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை ஆளுநருக்கு அனுப்பிவைத்தனர்.
அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான நோட்டீசை ஆளுநர் திரும்பப்பெறுவார் என்று சித்தராமையா மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியினர் முழுமையாக நம்பினர். ஆனால் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக தன்னிடம் புகார் கொடுத்த பிரதீப் குமார், ஆபிரஹாம், கிருஷ்ணா ஆகியோருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார். மேலும் அந்த கடிதம் முதல்வர் அலுவலகம் மற்றும் மாநில தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னீஷுக்கும் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தில், ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 17ஏ-ன் கீழ் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடுநிலையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டியது அவசியம். முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் குற்றங்களின் கமிஷனை வெளிப்படுத்துவதில் முதன்மையான பார்வையில் திருப்தி ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக முதல்வருக்கு அனுப்பிய நோட்டீசை திரும்பப்பெற வேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தியது பகுத்தறிவற்ற பரிந்துரை ஆகும்.
அமைச்சரவையின் பரிந்துரை புறக்கணிக்கப்படுகிறது. புகார் மனுக்களில் உள்ள குற்றச்சாட்டுகளை கூறும் ஆவணங்கள், சித்தராமையாவின் பதில், சட்டக்கருத்துடன் மாநில அமைச்சரவையின் பரிந்துரை ஆகியவை ஒரே விஷயத்தில் 2 விதமான பார்வைகளை வழங்குகிறது. ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 17ஏ மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 பிரிவு 218 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை முதல்வர் அலுவலகமும் உறுதி செய்திருக்கிறது. ஆளுநரின் முடிவை கர்நாடக மாநில பாஜ வரவேற்றுள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி சித்தராமையாவுக்கு ஆதரவளித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட முதல்வருக்கு எதிரான புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதற்கிடையே ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை
தன் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதுதொடர்பாக பேசிய முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நடத்தப்படும் மாபெரும் சதி இது. டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜ இதுபோன்று சதி செய்து ஆட்சியை கலைத்திருக்கிறது. அதைத்தான் கர்நாடகாவிலும் செய்ய முயற்சிக்கிறது. ஒன்றிய அரசு, பாஜ, மஜத மற்றும் மேலும் பலருக்கு இந்த சதியில் தொடர்பிருக்கிறது. காங்கிரஸ் மேலிடம், மாநில அரசு மற்றும் அமைச்சரவை எனக்கு ஆதரவாக இருக்கிறது. மாநிலத்தில் ஆளுநர் மாளிகையை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது. ஆளுநர் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார். நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.