சென்னை: சென்னை, கோயம்பேடு கிராமத்தில் நாகம்மாள் மற்றும் அவரது வாரிசுக்கு சொந்தமான 31 சென்ட் இடத்தை தாமஸ் ஆபிரகாம், அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் சேர்ந்து 1983ம் ஆண்டு கோடம்பாக்கம் சார்பதிவகத்தில் கிரையம் பெற்று அவர்கள் பெயரில் பட்டா பெற்று உள்ளனர். இந்நிலையில் மேற்படி இடத்தை விற்பனை செய்ததை மறைத்து நாகம்மாளின் வாரிசுகளான அரும்பாக்கத்தை சேர்ந்த எதிரி 1 முருகேசன், எதிரி -8 ஜெயலட்சுமி மற்றும் எதிரி 9 ராணி தாங்கள் மட்டுமே வாரிசுகள் என்று நுங்கம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் போலியான ஆவணங்கள் சமர்பித்து நிலஉடைமை பதிவேட்டிலும் பதிவு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து முருகேசன், ஜெயலட்சுமி மற்றும் ராணியின் வாரிசுகளும் சேர்ந்து முருகேசன் பெயரில் விடுதலை பத்திரம் பதிவு செய்து கொடுத்தும் அதன் பின்னர் முருகேசன் அந்த இடத்தை எதிரி 6 ராம்குமாருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளார். பொது அதிகாரம் பெற்ற ராம்குமார் எதிரி 7 குபேரனுக்கு விற்பனை செய்துள்ளார். இவ்வாறாக ஏற்கனவே விற்பனை செய்த சொத்தினை போலியான ஆவணங்கள் மூலம் எதிரிகள் கூட்டு சேர்ந்து மீண்டும் விற்பனை செய்து புகார்தாரரது சொத்தை அபகரித்துள்ளனர்.
இடத்தின் உரிமையாளர் தாமஸ் ஆபிரகாம் என்பவரிடமிருந்து பொது அதிகாரம் பெற்ற கோபாலகிருஷ்ணன், த/பெ வெங்கடேசன் என்பவர் கடந்த 2012 கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேற்படி நிலமோசடியில் ஈடுப்பட்ட 1) முருகேசன், த/பெ.கேசவன் 2)அசோக், த/பெ.சிவபிரசகாசம் 3) ஆனந்தி, க/பெ.சூர்யா 4) கார்த்திகா, க/பெ.ஏசு 5) மணிமேகலை, க/பெ.அய்யனார் 6) ராம்குமார், த/பெ. பச்சையப்பன் 7) குபேரன், த/பெ.லோகநாதன், 8. ஜெயலட்சுமி, த/பெ.கேசவன் 9) ராணி, த/பெ. கேசவன் ஆகியோர் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சென்னை, எழும்பூர் CCB & CBCID நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி பெற்று தர உத்தரவிட்டதின் பேரில், மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் A.ராதிகா, ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர் S.ஆரோக்கியம், நேரடி கண்காணிப்பில், நிலமோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி வழக்கின் சாட்சிகளை முறையாக ஆஜர் செய்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று 04.07.2025 இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கின் எதிரிகள் 1.ஆனந்தி, வ/57, அமைந்தகரை, சென்னை 2.கார்த்திகா, வ/52, அம்பத்தூர், சென்னை 3.மணிமேகலை, வ/51, அரும்பாக்கம், மற்றும் 4.குபேரன், வ/55, அமைந்தகரை, சென்னை ஆகிய 4நபர்களுக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் மொத்தம் ரூ.67,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். ராம்குமார் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற எதிரிகளான முருகேசன், அசோக் ஜெயலட்சுமி, ராணி ஆகியோர் இறந்து விட்டனர்.
குற்றவாளி குபேரன் புகார்தாரருக்கு உண்டான சொத்தில் திட்டமிட்டு வங்கி கடன் பெற்று ரூபாய் 7 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார் என்பதால் மேற்படி ரூபாய் 7 கோடி இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட சொத்தின் உரிமையாளர்களுக்கு சமமாக பங்கீட்டு நேரடியாகவோ அல்லது நீதிமன்றத்தில் வைப்பீடாகவோ செலுத்தவேண்டும் என்றும் செலுத்தாத பட்சத்தில் எதிரியின் அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனம் நீதிபதி A.செல்லபாண்டியன், B Com L.L.M அவர்கள் தீர்ப்பு வழங்கினார் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வராஜ் என்பவர் ஆஜராகி சிறப்பாக வாதாடினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்த மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினார்கள்.