Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை, கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் அவரது சகோதரர் சேகர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.