திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு 45 ஏக்கர் நிலம் 1960ம் ஆண்டு தானமாக வழங்கப்பட்டுள்ளது. நாளடைவில் நாடோடிகளாக பிழைப்பு தேடி ஆங்காங்கே வெளியூர் சென்று சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஊர் திரும்பினர். அப்போது தனி நபர் ஒருவர் தனக்குச் சொந்தமான பட்டா நிலம் எனக் கூறி கடந்த மாதம் அந்த நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க போலீஸ் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த நரிக்குறவர்கள் அப்பகுதியில் திரண்டு வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மீண்டும் அவர் அந்த இடத்தில் சுற்றுச் சுவர் அமைக்க முயற்சி செய்து வருவதால் இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனுக்களை அளித்தும் அதிகாரிகள் தங்களை கண்டு கொள்ளவில்லை என அவர்கள் கூற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இடம் குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்து 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் தரப்பில் யாரும் நேரில் வந்து பேசாததால் திடீரென சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர். அப்போது நரிக்குறவர் சங்க நிர்வாகிகள் சிலரை கலெக்டரிடம் நேரில் அழைத்துச் சென்று மனு அளிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் 2 மணி நேரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நரிக்குறவர் இன மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.