கர்நாடகா: நில மோசடி புகார் தொடர்பாக தன் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதிக்கும் முடிவு அரசியலமைப்பிற்கு எதிரானது என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு வைத்துள்ளார். கர்நாடக அரசின் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முடா முறைகேடு நடந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. அதாவது, மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தியது.
ஆனால், இந்த புகாரை மறுத்த முதல்வர் சித்தராமையா தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக தான் வீட்டு மனைகள் வழங்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். இந்த நிலையில், வழக்கறிஞர் டி.கே.ஆபிரகாம் நில ஒதுக்கீடு புகார் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநரின் மனு தாக்கல் செய்தார். இன்று அந்த மனுவை ஏற்ற ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சித்தராமையா மீது வழக்கு தொடர் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒன்றிய அரசு இணைந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி செய்கிறது என முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு வைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியதை பாஜகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதை சகிக்க முடியாமல் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றனர். என தெரிவித்தார்.