ராமநாதபுரம்: ரூ.3.16 கோடி நில மோசடி வழக்கில் ஏமாற்றிய பாஜ பிரமுகர் அழகப்பனுக்கு, ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை கவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேரில் மனு தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த பாஜ பிரமுகர் அழகப்பன். இவர் நடிகை கவுதமியின் சொத்துக்களை நிர்வகித்து வந்தார். இவர் மீது ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி கிராமத்தில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில், ₹3.16 கோடி மோசடி செய்துவிட்டதாக கடந்த மே மாதம் நடிகை கவுதமி ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 23.5.2024ல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் அழகப்பன், இவரது மனைவி நாச்சாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி அழகப்பன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் ஜே.எம்.எண்.2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாஜ பிரமுகர் அழகப்பன் கைதாகி வேலூர் சிறையில் உள்ளார். இந்நிலையில் அழகப்பன், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகை கவுதமி நேற்று, ராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் பிரபாகரன் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
நீதிமன்ற வளாத்தில் நடிகை கவுதமி அளித்த பேட்டியில், ‘‘எனக்கு நடந்த அநியாயத்திற்கு எவ்வளவு நாட்கள் ஆனாலும், எவ்வளவு தூரம் சென்றாலும் இறுதிவரை போராடுவேன்’’ என்றார்.