பாட்னா: என் தந்தையை போன்று இருப்பதால் நானே அடுத்த லாலு பிரசாத் யாதவ் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பிரதாப் பேட்டியளித்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ், கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். இந்த அறிவிப்பை அவரது தந்தை லாலு பிரசாத் யாதவே வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேஜ் பிரதாப், அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவருடன் 12 ஆண்டுகளாக உறவில் இருப்பதாகக் குறிப்பிட்டதே அவர் மீதான நடவடிக்கைக்குக் காரணமாக உள்ளது.
பின்னர், தனது சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பதிவை நீக்கினாலும், அவரது பொறுப்பற்ற நடவடிக்கையால் தேஜ் பிரதாப் கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் தள்ளி வைக்கப்படுவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு தேஜ் பிரதாப் யாதவ் அளித்த பேட்டியில், ‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு வருத்தமளிக்கிறது. எனக்கு எதிராக சதி நடக்கிறது. நானே அடுத்த லாலு பிரசாத் யாதவ் என்பது எல்லாருக்கும் தெரியும்.
எனது குரல், பேச்சு, மக்களுடன் பழகும் விதம் என அனைத்தும் என் தந்தையைப் போலவே இருப்பதால், என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். மேலும், எனது தம்பி தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வராவதற்கு எனது முழு ஆதரவும் உண்டு. நான் ஒரு ‘கிங் மேக்கராக’ இருக்க விரும்புறேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், எனது தொகுதிக்குச் சென்று மக்களுக்கு பணியாற்ற போகிறேன். எனது ஆதரவாளர்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.