பாட்னா: பீகாரில் வரும் அக்டோபரில் நடக்க உள்ள பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணியில் சேருவதற்கு அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இமான் தங்களுடைய கட்சியை மெகா கூட்டணியில் இணைத்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், பீகாரில் இந்தியா கூட்டணியில் ஏஐஎம்எம்ஐ கட்சியை சேர்ப்பது மதசார்பற்ற வாக்குகள் பிளவுபடுவதை தடுக்கும். இது வரும் தேர்தலில் மாநிலத்தில் மெகா கூட்டணி ஆட்சி ஏற்படுவதை உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார். 2020 பேரவை தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிட்டதால் சீமாஞ்சல் பகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர்கள் பலரது வெற்றி பாதிக்கப்பட்டதோடு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பையும் அக்கட்சி பறிகொடுத்தது.
* ஆர்ஜேடி வேண்டுகோள்
ஆர்ஜேடி கட்சி எம்பி மனோஜ் ஜா நேற்று பேட்டியளிக்கையில்,‘‘பீகார் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடாமல் ஆர்ஜேடிக்கு கொள்கை அளவில் ஆதரவை தர வேண்டும். வலது சாரி சர்வாதிகாரம், வெறுப்பு அரசியலுக்கு எதிராக போராடும் அனைவரும் ஒன்று சேர வேண்டும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட கோட்டை வழங்கியுள்ளது. வெறுப்பு அரசியல் பீகாரில் முடிவடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் நல்லது’’ என்றார்.