சென்னை : நடிகை லட்சுமி மேனனுடன் தனக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு நடிகர் விஷால் முற்றுப்புள்ளி வைத்தார். பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் இணைந்து நடித்த நடிகர் விஷால் – நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவந்தன. ஒருசில ஊடகங்களில் இது செய்தியாக வெளியானது.
இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது பதிவில் விஷால் கூறியிருப்பதாவது: “என்னைப் பற்றிய போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என தெரியும்; நடிகை லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என பரவிவரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்! இது ஆதாரமற்றது; நடிகை என்பதை தாண்டி முதலில் அவர் ஒரு பெண், நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து, அடையாளத்தை கெடுக்கிறீர்கள்!
ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம்குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.