ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பி, கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த, கிருஷ்ணாகுப்பம் பகுதியில் ஏரியிலிருந்து உபநீர் செல்லும் கால்வாய் முழுவதும் செடி, கொடிகள், கருவேல மரங்கள் வளர்ந்து அதிகளவில் காணப்படுகின்றன.
இதனால், நீர் பாசனத்திற்கான ஏரியிலிருந்து செல்லும் கால்வாய் காணாமல் போனதால், உபரிநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நெல் போன்ற உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், நிலத்திற்கு பாய்ச்ச தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கிருஷ்ணாகுப்பம் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், கருவேல மரங்கள் ஆகியவற்றை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.