Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளிப்பதற்காக இறங்கியபோது விபரீதம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: பல்லாவரம் அருகே சோகம்

சென்னை: பல்லாவரம் அருகே ஏரியில் குளித்த 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் ஹன்சிக் சாய் (6), அம்மன் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் ஹன்சிக் சாய், தனது வீட்டின் அருகே வசிக்கும், சக மாணவன் மகதீஷ் (6) என்பவனுடன், அருகே உள்ள பெரிய ஏரியின் கரை அருகே விளையாடி உள்ளான்.

பிறகு ஆர்வ மிகுதியில் சிறுவர்கள் இருவரும் ஏரியில் குளிப்பதற்காக இறங்கியதாக கூறப்படுகிறது. இதில், எதிர்பாராதவிதமாக ஹன்சிக் சாய் தண்ணீரின் ஆழமான பகுதிக்கு சென்று, நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளான். அவனை காப்பாற்றுவதற்காக சிறுவன் மகதீசும் முயற்சி செய்துள்ளான். இதில், சிறுவர்கள் இருவரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

இதனிடையே, விளையாடச் சென்ற 2 சிறுவர்களும் வெகுநேரமாகியும் மதிய உணவு சாப்பிடக் கூட தங்களது வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த 2 சிறுவர்களின் பெற்றோரும், அவர்கள் கடைசியாக விளையாடிய பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அங்கு சிறுவர்கள் இல்லாததால், சந்தேகமடைந்த ஹன்சிக் சாயின் தந்தை சதீஷ்குமார் அருகில் உள்ள பெரிய ஏரிக்குச்சென்று பார்த்தபோது, அங்கு 2 சிறுவர்களும் தண்ணீரில் மிதப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக 2 சிறுவர்களையும் மீட்டு, சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதைக் கேட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவர்கள் இருவர், ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சிறுவன் மகதீஷின் தந்தை குட்டிராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், தாய் இந்திராவின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளான். தற்போது சிறுவனும் பலியானதால் அந்த குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.