புதுடெல்லி: கொல்கத்தாவில் ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரியில் முன்னாள் முதல்வர் பதவி காலத்தில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை சிபிஐ தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவ கல்லுாரியில் நடந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை சம்பவம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில் சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் இது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் அக்தர் அலி புகார் எழுப்பினார்.இது குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த நிலையில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக தேவையான ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருந்து சிபிஐ நேற்று சேகரித்தது. மீண்டும் வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.
முக்கிய குற்றவாளி, 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை
கொல்கத்தாவின் ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தன்னார்வலர் சஞ்சய் ராய் மற்றும் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், 4 மருத்துவர்கள் மற்றும் சிவிக் தன்னார்வலருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று உண்மை கண்டறியும் சோதனை செயல்முறைகள் தொடங்கியது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சாய் ராய்க்கு அங்கேயே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 6 பேருக்கும் கொல்கத்தா சிபிஐ அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக டெல்லி தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து உண்மை கண்டறியும் நிபுணர்கள் குழு கொல்கத்தா வந்தனர்.
* 3 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பலாத்கார கொலை சம்பவத்தை கண்டித்து வியாழன்று பேரணி நடைபெற்றது. ஹவுரா மாவட்டத்தில் நடந்த இந்த பேரணியில் அரசு நிதியுதவி பெறும் பலுஹாதி உயர்நிலை பள்ளி, பலுஹாதி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பன்ட்ரா ராஜ்லக்ஷ்மி பெண் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் பள்ளி வேலை நேரத்தில் இதுபோன்று பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுவது விதிமுறை மீறல் என்றும் இது குறித்து விளக்கமளிக்க கோரியும் 3 பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.