Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

உணவினை அழகுப்படுத்திதான் புகைப்படம் எடுக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

எந்த உணவாக இருந்தாலும் முதலில் அவை நம் கண்கள் சுவைத்த பிறகுதான் நம்முடைய நாவில் அது எப்படிப்பட்ட சுவையாக இருக்கும் என்பதை நம் மூளை உணரச் செய்யும். கண்களால் ஒரு உணவினை சுவைக்க வைக்க முக்கிய பங்கு அதனை புகைப்படம் பிடிக்கும் புகைப்பட கலைஞரையே சேரும். அப்படிப்பட்ட புகைப் படங்களைதான் எடுத்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஷர்மிளா. புகைப்படத் துறையில் பலவகை இருந்தாலும் இவர் ஃபுட் போட்டோகிராபியினை தேர்வு செய்த காரணம், அதன் பயணம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘சொந்த ஊர் ஈரோடு, திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாகிட்டேன். வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் பேக்கிங் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். பொழுதுபோக்கிற்காகத் தான் நான் பேக்கிங் கற்றுக் கொண்டேன். அதனால் அதனை விற்பனை செய்யவில்லை. மாறாக நான் செய்யும் கேக்கினை ரெசிபி மற்றும் புகைப்படத்துடன் பிளாக் பக்கத்தில் வெளியிட்டேன். பத்து வருடங்களுக்கு முன் இன்ஸ்டா பக்கங்கள் எல்லாம் கிடையாது. பிளாக், முகநூல் மட்டும்தான் இருந்தது.

அதனால் நான் செய்யும் கேக் ரெசிபிக்களை பிளாக்கில் புகைப்படத்துடன் வெளியிட ஆரம்பித்தேன். இயற்கை வெளிச்சத்தில் என்னிடம் இருந்த செல்போனில்தான் படம் எடுப்பேன். ஆனால், அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அப்போதே அந்த உணவினை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும். அவ்வளவு ஈர்க்கக்கூடியதாக இருந்தது அந்த புகைப்படங்கள். அப்போதுதான் எனக்குள் புகைப்படம் எடுக்கும் திறமை இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். யுடியூப்பில் DSLR கேமராவில் எப்படி படம் பிடிக்கலாம் என்ற அடிப்படை விஷயங்களை சுற்றுக் கொண்டேன். பிறகு DSLR கேமரா ஒன்றை வாங்கி அதில் புகைப் படங்களை எடுத்தேன். உணவுப் புகைப்படம் என்பதால் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்ட வேண்டும். அதற்கு பிளாஷ் மற்றும் ஷட்டர் ஸ்பீட் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அது குறித்து சிறப்பு பயிற்சி மேற்கொண்டேன்.

என் பிளாக் பக்கத்தினை பார்த்து பல உணவு நிறுவனங்கள் அவர்களின் பிராண்ட் குறித்து என் பக்கத்தில் புரோமோஷன் செய்து தரச் சொல்லி கேட்டார்கள். நானும் அவர்களின் பொருட்களைக் கொண்டு என்ன உணவு சமைக்கலாம் என்று அதன் ரெசிபிக்கள் மற்றும் அதன் புகைப்படத்தினை பதிவு செய்ய ஆரம்பித்தேன். நாளடைவில் அதே உணவை அவர்களின் இணையத்திலும் தங்களின் பொருட்களின் புகைப்படங்களை பதிவு செய்ய என்னிடம் வந்தார்கள்.

அவர்களின் பொருட்களையும் புகைப்படம் எடுத்து தரச் சொல்லிக் கேட்டார்கள். எனக்கு ஃபுட் போட்டோகிராபி மேல் விருப்பம் இருந்ததால் நானும் அதை என்னுடைய தொழிலாக செய்ய துவங்கினேன். பொழுதுபோக்காக ஆரம்பித்தது இன்று என்னுடைய தொழிலாகவே மாறிவிட்டது. தற்போது புகைப்பட கலைஞராக நான் பயணித்து வருகிறேன்’’ என்றவர் ஃபுட் போட்டோகிராபி குறித்து விவரித்தார்.

‘‘ஒரு பிராண்டினை புரமோட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு புகைப்படம் அவசியம். வாடிக்கையாளர்கள் உணவு சம்பந்தமான பொருட்கள் என்றால் முதலில் அந்த உணவை சமைத்த பிறகு எப்படி இருக்கும் என்று புகைப்படத்தை பார்த்த பிறகுதான் அதை வாங்கவே முன்வருவார்கள். அவர்களின் கண்கள் மூலம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவது போல்

புகைப்படங்கள் இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் இயற்கை வெளிச்சத்தில்தான் படம் பிடித்தேன். ஆனால், சில உணவுகளை அவ்வாறு படம் பிடிக்க முடியாது. நல்ல லைட்டிங் செட் செய்து படம் பிடிக்கும் போது அந்த உணவு அவ்வளவு அழகாக இருக்கும். மேலும், ஒரு உணவினை சமைக்கும் முறையினை கதை வடிவத்தில் கொடுக்கும் போதுதான் மக்களும் விரும்பி பார்ப்பார்கள், பொருளை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். உதாரணத்திற்கு சாம்பார் நாம் அன்றாடம் வீட்டில் செய்யும் உணவுதான்.

ஆனால், அதில் பயன்படுத்தப்படும் சாம்பார் பொடிதான் சுவையில் வித்தியாசம் கொடுக்கும் என்பதை மக்களிடம் புகைப்படம் மூலம்தான் கொண்டு ெசல்ல முடியும். சாம்பார் மட்டுமில்லாமல் அதற்கு தேவையான பருப்பு, தாளிப்பு பொருட்கள், மசாலாக்கள் அனைத்தும் நான் எடுக்கும் புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். அதுவே கிறிஸ்துமஸ் கேக் என்றால், கிறிஸ்துமஸ் லைட் பெல், கேப் போன்றவை இருக்கும். புகைப்பட துறை, ஒரு பெரிய கடல். அதில் உணவு சார்ந்த புகைப்படங்கள் என்பது தனி கலை.

பொதுவாக ஒரு போர்ட்ரெயிட் படம் எடுக்கும் போது மேக்கப் போட்டு ஆர்டிஸ்ட் கேமரா முன் நிற்பார். நாம் அவரை அழகா புகைப்படம் எடுப்போம். ஆனால், உணவுப் பொறுத்தவரை சாப்பாடு அப்படியேதான் இருக்கும். நாம் தான் அதை அழகுப்படுத்தி புகைப்படம் எடுக்க வேண்டும். சிலர் புகைப்படத்தில் பாரம்பரிய டச் விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உணவினை பித்தளை தூக்குச்சட்டி அல்லது கல்சட்டியில் இருப்பது போல் படம் பிடிப்பேன். இதுவே மாடர்னாக வேண்டும் என்றால் கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துவேன்.

உணவை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தூண்டச் செய்ய பேக் ரவுண்ட் மட்டும் அலங்கரித்தால் போதாது... உணவிற்கும் சில மேக்கப் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, சிக்கன் கிரேவி அல்லது மீன் ஃபிரை என்றால் அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கொண்டு அலங்கரித்தால் பார்க்க அழகாகவும் வண்ணமயமாகவும் இருக்கும். அதுவே சாம்பார் என்றால் அதன் மேல் எண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை கொண்டு தாளிதம் சேர்த்திருப்பது மிதந்து கொண்டு இருப்பது தெரிய வேண்டும். அதுவே பான் கேக்கில் தேன் வடிவது, கேக்கில் சாஸ் தெளிப்பது போன்ற புகைப்படங்களை ஆக் ஷன் படங்கள் என்று குறிப்பிடுவோம்” என்றவர், தன் எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்.

‘‘ஃபுட் போட்டோகிராபியில் எனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி வருகிறேன். அதற்காக வேறு புகைப்படம் எடுக்க மாட்டேன் என்றில்லை. எல்லாவிதமான புகைப்படங்களை எடுக்கும் போதுதான் முழுமையான அனுபவம் கிடைக்கும். ஆனால், அதிலும் எனக்கு போர்ட்ரெயிட் படங்களாக மட்டும் இல்லாமல் வாட்ச் போன்ற பொருட்கள் சார்ந்து படம் பிடிக்க வேண்டும். புகைப்படத்துறையை பொறுத்தவரை பலர் வெட்டிங் மற்றும் போர்ட்ரெயிட் துறையினைதான் தேர்வு செய்றாங்க. ஃபுட் போட்டோகிராபியில் நல்ல எதிர் காலம் இருக்கு. தினமும் புது உணவகம். உணவுப் பொருட்கள் அறிமுகமாகிறது.

பலர் வீட்டில் இருந்தபடியே குக்கீஸ், கேக் போன்றவற்றை சிறு தொழிலாக செய்றாங்க. அவர்களின் பொருட்களை மக்களிடம் விளம்பரம் செய்ய புகைப்படம் அவசியம் என்பதால் ஃபுட் போட்டோ கிராபிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் ஃபுட் போட்டோகிராபி குறித்து வர்க்ஷாப் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன். இந்த துறையில் நாளுக்கு நாள் அதன் தொழில்நுட்பங்கள் மாறி வருகிறது. அதற்கு ஏற்ப நான் என்னை அப்கிரேட் செய்து கொண்டு இருக்கிறேன். தற்போது பல பெரிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்’’ என்றார் ஷர்மிளா.

தொகுப்பு: ரிதி