Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகின் சிறந்த ஆசிரியர் விருது!

நன்றி குங்குமம் தோழி

2026-ம் ஆண்டிற்கான உலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ளார் காஷ்மீரை சேர்ந்த ஆசிரியர் ரூபிள் நாகி. ஐ.நா.​வின் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து லண்​டனை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘வர்கி அறக்​கட்​டளை’ ஆண்​டு​தோறும் சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ரூபிள் நாகிக்கு விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

ஆசிரியராக சிறந்த பணியாற்றும் ரூபிள் நாகி, ஓவியராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் பங்காற்றி வருகிறார்.ரூபிள் நாகி ஆர்ட் ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட கல்வி மையங்களை உருவாக்கியிருக்கிறார். இந்தியாவில் குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளியில் சேராத குழந்தைகளுக்கு முறையான கல்வியை அறிமுகம் செய்தல், தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி வகுப்புகள் போன்ற கல்வி சேவைகளை வழங்கி, குழந்தைகள் எந்த தடைகளுமின்றி படிப்பதற்கு தேவையான ஆதரவளித்து, சமூகத்தின் ஆதரவையும் பெற்றுத் தருகின்றன. ரூபிள் நாகி சுமார் 20 ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி வருகிறார். லட்சக்கணக்கான குழந்தைகள் இவரின் முன்னெடுப்பால் கல்வி கற்கின்றனர். ஒரு ஆசிரியராக தன் சிறப்பை வெளிப்படுத்தும் ரூபிள் ஒரு ஓவியராகவும் சுவர் ஓவியங்களின் மூலம் புதுமையான முறையில் கல்வியை கற்பித்து வருகிறார்.

‘Living Walls of Learning’ என்ற இயக்கத்தை தொடங்கி ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்ட சுவர்களை ஓவியமாக மாற்றுகிறார். அவை எழுத்து, கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை எடுத்துரைக்கும் ஓவியங்களாக உள்ளன. பொது ஆரோக்கியம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற வாழ்க்கைத் திறன்களை கற்பிக்கும் காட்சிகள் என கலை மூலம் அறிவியலை உட்படுத்தி குழந்தைகளை கல்வியுடன் ஈடுபடுத்துகிறார். இதன் மூலம் பள்ளிக்கூடம் செல்லாத சமூகங்கள் கூட எழுதப் பழகவும், கணக்குகளை கற்கவும் முயல்கிறார்கள்.

உலகத்தின் சிறந்த ஆசிரியர்களையும் கல்வி மாற்றங்களையும் போற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த விருதை பெற ரூபிள் நாகி 5000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபிள் நாகி அவர் பெற்ற சுமார் ரூ.9 கோடி பரிசு பணத்தை கல்விச் சேவை வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இலவச தொழிற் பயிற்சி நிறுவனத்தை தொடங்குதல், டிஜிட்டல் கல்வி மற்றும் தொழில்முறை திறன்களுக்கான வாய்ப்புகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் பின்தங்கிய பயிற்சியாளர்களுக்கு புதிதாக வாய்ப்பு கொடுக்கும் நோக்கிலும் அமையும். ரூபிள் நாகியின் இந்தப் பயணம் கற்பித்தல் மட்டுமல்ல, சமூக மாற்றம், மனிதாபிமானம் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்த ஒரு பெரிய பாடத்தை உலகுக்குக் காட்டுகிறது. குழந்தைகள் கல்வி கற்பதற்கான ஆதரவே இல்லாத இடங்களில் எல்லாம் கல்வியை சாத்தியப்படுத்தியுள்ளார் என்பதே இவர் செய்த மிகப்பெரிய சமூக மாற்றம்.

தொகுப்பு: ஆர்.ஆர்