Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆல் இந்தியா கலைஞர்களின் படைப்புகள் சென்னையில்!

நன்றி குங்குமம் தோழி

கிருஷ்ணஸ்வாமி

சென்னை மக்களுக்காகவே இந்தக் கண்காட்சியை ஆரம்பிச்சிருக்கோம். சென்னையை பொறுத்தவரை இங்கு கலைஞர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் படைப்புகளை கொண்ட கலைக்கூடங்களும் பல உள்ளன. சென்னையை தாண்டி மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் திறமையான கலைஞர்கள் உள்ளனர். அந்தத் திறனை சென்னை மக்களுக்கு அறிமுகம் செய்ய நினைத்தேன். அதன் வெளிப்பாடுதான் இந்த சமகால (Contemporary art) கலை கண்காட்சி’’ என்கிறார் அஸ்வின். இவர் ‘அஷ்விதா’ கலைக்கூடத்தினை நிர்வகித்து, அதன் மூலம் இந்தியா முழுதும் உள்ள பல கலைஞர்களின் படைப்புகளை தன் கலைக்கூடத்தில் காட்சியாக வைத்துள்ளார்.

‘‘இந்த முறை நாங்க சமகால கலைகள் ‘Contemporary now’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 25ம் தேதி வரை நடத்த இருக்கிறோம். என்னுடைய கலைக்கூடத்தில் மட்டுமில்லாமல் லலித் கலா அகாடமி, புராஜெக்ட் 88, வதேரா ஆர்ட் கேலரி, டார்க், சாட்டர்ஜி & லால் என ஏழு கலைக்கூடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 66 கலைஞர்கள் பங்கு பெற்றுள்ளனர். சென்னை மக்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்ப கலைஞர்களின் படைப்புகளை படைத்திருக்கிறோம். இதில் சார்கோல் முதல் ரீசைக்கிள் செய்யப்பட்ட டீக்வுட், கைத்தறிகள், போட்டோகிராபி, ஓவியங்கள், சிற்பங்கள், அப்ஸ்ட்ராக்ட், மாடர்ன் ஆர்ட் என அஞ்சு டோடியா, ஜித்தீஷ் கல்லத், மித்து சென், நிகில் சோப்ரா போன்ற பிரபல கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன’’ என்றவர், இது கலைக்கூடத்திற்கான கண்காட்சி என்றுரைத்தார்.

‘‘பொதுவாக கலைக்கூடங்களில் பிரபல கலைஞர்களின் படைப்புகளை வைத்திருப்பார்கள். அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். நான் கலை துறையில் 25 வருடமாக இருப்பதால், கலைக்கூடத்தினை நிறுவினேன். மேலும், கலைஞர்களின் படைப்புகளை தேர்வு செய்து அவர்களின் சிறப்பினை மட்டுமே காட்சிப்படுத்தி இருக்கிறேன். ெபாதுவாக இது போன்ற கலைகளின் விலை அதிகம் என்பதால் மக்கள் வாங்க விரும்புவதில்லை. இது ஒரு முதலீடு. ஒரு கலைஞர் வருடத்திற்கு 30 ஓவியங்கள் வரைந்தாலும் அவரின் அனைத்து படைப்பிற்கும் டிமாண்ட் இருக்கும். கலைஞரின் டிமாண்டிற்கு ஏற்ப அதன் விலையும் மாறுபடும். உதாரணத்திற்கு ரவிவர்மாவின் ஓவியத்திற்கு இன்றும் மதிப்பு இருக்கிறது’’ என்ற அஸ்வின், ஒவ்வொரு வருடமும் இது போன்ற கண்காட்சியினை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

‘‘இந்தக் கண்காட்சியில் அய்யனார் கடவுளைப் பற்றி சிற்பமாக வடிவமைத்திருக்கிறேன்’’ என்று பேசத் துவங்கினார் கிருஷ்ணஸ்வாமி. ‘‘கலைக் கல்லூரியில் ஓவியம் முடிச்சேன். அதன் பிறகு ப்ரீலான்சராக வேலை பார்த்தேன். 2005 முதல் லைவ் பர்பார்மென்ஸ் ஆர்ட் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என் உடல் முழுதும் வண்ணங்களை பூசி யோகாசன வடிவங்களை கேன்வாஸில் பதிவு செய்தேன். கிரியேட்டிவிட்டிக்கு மீடியம் கிடையாது. சில சமயம் ஓவியமாக இருப்பது சிற்பமாகவும் மாறும். ஒரு கலைஞனின் மனநிலை பொறுத்துதான் படைப் புகள் உருவாகிறது.

கற்காலத்தில் இருந்தே மனிதனுக்குள் பயம் என்ற விஷயம் இருந்து வந்தது. பிரபஞ்சத்தில் ஒரு சக்தி தன்னை பாதுகாத்து வருவதாக மனிதன் உணர்ந்தான். அதை நாம் கடவுள் ரூபத்தில் வணங்குகிறோம். என் குலதெய்வம் அய்யனார். சின்ன வயசில் இருந்தே அய்யனார் சிலை மற்றும் அங்குள்ள குதிரைகளை பார்த்து வளர்ந்தேன். அங்கு அய்யனார், குதிரை சிலை மட்டுமில்லாமல் மக்கள் வேண்டிக் கொண்டு சில வடிவங்களில் சிற்பங்களை அங்கு வைப்பார்கள். அதைப் பார்க்கும் போது கோயில் என்பதை தாண்டி பல கலைகள் கொண்ட இடமாக எனக்கு தோன்றியது. நான் பார்த்த அந்த விஷயங்களைதான் இங்கு உருவமாக வடிவமைத்திருக்கிறேன்’’ என்றார் கிருஷ்ணஸ்வாமி.

பென்னிட்டா பெர்சியால்

‘2002ல் நான் பெயின்டிங் மற்றும் பிரின்ட் மேக்கிங் குறித்து படிச்சிருக்கேன். ஆனால், கல்லூரி படிப்பு முடித்தவுடன் எனக்கு சிற்பம் வடிவமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது’’ என்று பேசத் துவங்கினார் கலைஞர் பென்னிட்டா பெர்சியால். இவரின் படைப்பும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

‘‘நான் ஒரு செல்ஃப் போர்ட்ரெயிட் ஆர்டிஸ்ட். என்னை சுற்றி நடக்கும் விஷயங்களை ஓவியமாக பதிவு செய்திருக்கிறேன். அதேபோல் விதைகள், இலைகள், வேர்களை என் ஓவியத்தில் அதிகம் பார்க்கலாம். என் ஓவியங்களின் நிறங்களை வண்ண டியூபில் அடக்கிடக்கூடாது என்பதால், இயற்கை மூலமாக நிறங்களை அமைத்து அதில் வண்ணங்கள் தீட்ட ஆரம்பிச்சேன். அதுவரை ஒரு மாயையில் இருந்த என் எண்ணங்கள் என் வீட்டிற்கு வந்த அணில் குட்டியினால் மாறியது. அம்மா இல்லாமல் இருந்த அந்தக் குட்டி அணிலை வளர்த்த போதுதான் அதன் செயல்பாடு நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு இலங்கையில் வர்க்‌ஷாப்பிற்காக சென்ற போது அங்கு நான் பார்த்த பல விஷயங்கள் எனக்குள் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. நாங்க தங்கியிருந்த இடத்தில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்ேட இருக்கும். அங்கு முகாமில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்த ஒரு அடையாளமும் கிடையாது. அவர்களின் வாழ்க்கை எப்போது என்ன நடக்கும் என்ற மனநிலையில்தான் இருந்தது. பொது இடங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் எனக்குள் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதை என் படைப்பில் வெளிப்படுத்த துவங்கினேன்.

இலங்கை அழகான இடம். மசாலாப் பொருட்களுக்கு ஃபேமஸ் என்பதால் கிராம்பினை நான் வரைந்தேன். மேலும், அதைக் கொண்டு மாலை ஒன்றை கட்டினேன். ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. கிராம்பில் காம்பு சிறியது. அதிலிருந்து எண்ணெய் வெளியேறும். அதன் வாசனை தலைவலியினை கொடுக்கும். இந்த சிரமங்களை கடந்து தான் மாலையினை கட்டி முடித்தேன். அங்கிருந்த ஒரு மாதம் எனக்கு பல விஷயங்களை புரிய வைத்தது’’ என்றவர், பழைய மற்றும் உடைந்து போன பொருட்களையும் கலைநயத்துடன் மாற்றியமைத்து காட்சியில் வைத்திருந்தார்.

குருநாதன்

‘‘சென்னை எக்மோரில் உள்ள கலைக்கல்லூரி மாணவன் நான். இந்தக் கல்லூரிக்கு தனி வரலாறே உள்ளது. அங்கு படித்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு மாணவரின் யோசிக்கும் திறன் மாறுபட்டிருக்கும். அங்கு இளங்கலை மட்டுமில்லாமல் முதுகலைப் பட்டமும் முடித்தேன். அதன் பிறகு நான் அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்தேன். பள்ளியில் இருந்து விடுவித்த பிறகு என்னுடைய கலையில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன்’’ என்று பேச ஆரம்பித்தார் குருநாதன்.

‘‘நான் வசிக்கும் இடம் தொழிற்சாலைகள் நிறைந்தது. நிறைய ஸ்கிராப் பொருட்கள் இருக்கும். அதைப் பார்க்கும் ேபாது என் கண்களுக்கு மட்டும் ஒரு உருவமாக தோன்றும். துருப்பிடித்த தகரம் எனக்கு தீவு போல் காட்சியளிக்கும். ஒரு கலைஞன் தன்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை ஓவியம் மூலமாக பிரதிபலிப்பான். அப்படித்தான் நான் அந்த தகட்டினை கொண்டு மலை, ஆறு எல்லாம் இருப்பது போன்ற வரைபடத்தை அமைத்தேன்.

இந்தக் கண்காட்சியில் பழைய தகரத்தால் செய்யப்பட்ட கலை வடிவங்களை படைத்திருக்கிறேன். ஒன்றைப் பார்க்கும் போது எரிமலை போன்றும் மற்றொன்று நீர்வீழ்ச்சி போல் எனக்கு காட்சியளித்தது. எரிமலையும் நம்முடைய மனமும் ஒன்றுதான். எரிமலை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் அழுத்தத்தை தீப்பிழம்பாக வெளியேற்றுகிறது. அதேபோல் நாமும் நம் மனதை அரித்துக் கொண்டிருக்கும். சந்தோஷம், கவலை, துக்கம் போன்ற பல சிந்தனைகளை அடக்கிக் கொண்டிருக்கிறோம். அது என்றாவது ஒரு நாள் வெடிக்கும். என்னுடைய ஸ்பெஷாலிட்டி பழைய பொருட்களை கொண்டு வடிவமைப்பது தான். குறிப்பாக துருப்பிடித்த தகரம் என் பார்வைக்கு ஒரு உருவமாக தோன்றும்’’ என்றார் குருநாதன்.

தொகுப்பு: ஷம்ரிதி