Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கற்றலையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் மரப் பொம்மைகள்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளுக்கும் பொம்மைகளுக்கும் எப்போதும் அழகான பிணைப்புண்டு. அவை வெறும் பொம்மைகள் மட்டுமல்ல... குழந்தைகளுக்கான உலகத்தை உருவாக்கும் முக்கிய கருவிகளே. பிறந்த குழந்தைகள் முதல் வளர்ந்த குழந்தைகள் வரை பொம்மைகளை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், இன்றைய தலைமுறை அப்படி இல்லை. இக்கால குழந்தைகள் பொம்மைகளை விட செல்போன்களையே விரும்புகின்றனர். இதுதான் தற்போதைய பெற்றோர்களின் பெரிய கவலையாகவும் சவாலாகவும் மாறி வருகின்றது.

நகரும் படங்கள், வண்ண மயமான திரை, கவரும் இசை இவை எல்லாம் குழந்தைகளை எளிதாக செல்போன் பக்கம் இழுத்து விடுகின்றன. இதை தவிர்ப்பது கண்டிப்பாக பெற்றோர்களுக்கு கடமையாகப் பார்க்கப்படுகிறது. காரணம், குழந்தைகளின் கண் பார்வை, கவனக்குறைவு, வெளித் தொடர்பு குறைந்து போதல், பேச்சு மற்றும் செயல் திறன் குறைதல், வெளிப்புற விளையாட்டில் ஆர்வமின்மை, உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு மாற்று வழிதான் மரப் பொம்மைகள் என்கின்றார் ‘Hi 5 Toys’ உரிமையாளர் மோகனப்பிரியா குமரேசன். இவர் குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கற்றலை ஊக்குவிக்கும் மரப்பொம்மைகளின் விற்பனையில் அசத்தி வருகிறார். அவரிடம் மரப்பொம்மைகளை பற்றி கேட்ட போது…

‘‘சொந்த ஊர் ஈரோடு பவானி. கோயம்புத்தூர்ல மாஸ்டர்ஸ் டிகிரி படிச்சேன். கேம்பஸ் இன்டர்வியூல வேலைக்கு செலக்ட் ஆகியிருந்தேன். திருமணம் நிச்சயமானதால் வேலைக்கு போக முடியல. கணவர் கப்பல் வேலையில் கேப்டனாக இருக்கிறார். அவருக்கு 4 மாதம் வேலை. 4 மாதம் விடுமுறை என்பதால் நான் பையனை அதிக கவனத்துடன் பார்க்க வேண்டியிருந்தது. மாமியாரும் நல்லா பாத்துப்பாங்க. எல்லா அம்மாக்களையும் போல் குழந்தைக்காக நானும் மெனக்கெடுவேன்.

செல்போனை தவிர்த்து அவனையே சாப்பிட வைப்பது, புத்தகத்தை காட்டுவது போன்ற பழக்கங்களை கொண்டு வந்தேன். அவனுக்கு தேவையான பொருட்களை தேடித் தேடி வாங்குவேன். அதில் பொம்மைகளும் ஒன்று. பொம்மைகளுக்காக தேடும் போது பெரும்பாலும் பிளாஸ்டிக் பொம்மைகள்தான் சந்தையில் கிடைத்தன. விலையும் அதிகமாக இருந்தன. சின்னக் குழந்தைகள் வாயில் வைத்து கடித்து விளையாடக்கூடியவர்கள் என்பதால் எப்போதும் குறைந்த தரத்தில் உள்ள பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்கி தரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். சில கடைகள் மற்றும் ஆன்லைனில் மட்டுமே மரப்பொம்மைகளை விற்பனை செய்தனர். அவை கற்றலுடன் கூடிய பொம்மைகளாகவும் இருந்தன.

என்னைப் போலத்தானே எல்லா அம்மாக்களின் தேடல் இருக்கும். அந்தத் தேடலுக்கு எங்க கடை விடை தரட்டும் என்ற எண்ணத்தில் இந்த பிசினஸை ஆரம்பித்தேன்’’ என்ற மோகனப்பிரியா தன் விற்பனை பயணத்தை பகிர்கிறார்.‘‘எனக்கு மரப்பொம்மைகள் விற்பனை செய்யும் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. ஆனால், அவர் மொத்த விற்பனை மட்டும் தான் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டார். என்னைப் போலவே மரப்பொம்மைகளைத் தேடும் அம்மாக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் நானே விற்கலாமே என்ற எண்ணம் வந்தது. என் எண்ணத்தை கணவரிடம் சொன்னேன். உன்னால் முடியும் என்று சொல்லி 25,000 ரூபாய் தந்தார்.

முதலில் என் மாமியாரின் அறையில் இரும்பு ராக்குகளில் பொம்மைகளை அடுக்கி வைத்து சின்னதாக பிசினஸ் ஆரம்பித்தேன். நண்பர்கள், உறவினர்கள் என்று வாட்ஸ் அப் குரூப்பிலிருந்துதான் எங்கள் ‘Hi 5’ டாய்ஸின் விற்பனை தொடங்கியது. தேவைப்படுவோருக்கு கொரியர் செய்தேன். என் கணவர் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவரே நேரடியாக டெலிவரி செய்தார். இப்படியாக படிப்படியாக எங்கள் வியாபாரம் வளர்ந்தது’’ என்றவர் 2019ல் பிசினஸை தொடங்கியுள்ளார்.

‘‘ஆரம்பத்தில் குறைந்த முதலீடு, இடப் பற்றாக்குறை, வித்தியாசமான பொம்மைகளைத் தர வேண்டும் என்பதால் குறைந்த அளவில்தான் பொம்மைகளை வாங்கினேன். பல்வேறு வென்டார்களிடமிருந்து ஆன்லைனில் வாங்கி நான் ரீசெல்லராக என் பயணத்தைத் தொடங்கினேன். யாரையும் நேரில் சென்று பார்த்து வாங்கவில்லை. அப்படி வாங்கியதன் அடிப்படையில் ஒருவர் ஏமாற்றிவிட்டார். உடைந்த மற்றும் சீனா பொம்மைகளை அனுப்பி விட்டார். அவரை அணுகிய போது சரியான பதிலுமில்லை. ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் வந்தாலும் தவறுகளிலிருந்து பல தெளிவுகள் கிடைத்தன. நான் என் குழந்தையை மனதில் வைத்தே மற்ற குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகளை தேர்ந்தெடுக்கிறேன்.

அவர்களை கவரவும் செய்ய வேண்டும். அதே சமயத்தில் அறிவுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பொம்மைகளை வாங்குகிறேன். குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை தரக் கூடாது என்பதிலும் கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். சமீபத்தில் டெல்லியில் உலகளவிலான டாய்ஸ் விற்போருக்கான 10 நாட்கள் கண்காட்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற போது, மொத்த விற்பனையாளர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் மூலமும் பலவிதமான மரப் பொம்மைகளை வாங்கி விற்பனை செய்கிறேன்’’ என்கிறார் மோகனப்பிரியா குமரேசன். ‘‘முதலில் இன்ஸ்டாகிராமில் பக்கம் துவங்கி அதன் மூலமாகத்தான் விற்பனை செய்தேன்.

ஆர்டர்கள் நிறைய வரத் தொடங்கியதும் வீட்டுக்கு எதிரிலேயே இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு பேரை உதவிக்காக நியமித்து இருக்கிறேன். நாங்க குடும்பமாக இதில் வேலை செய்கிறோம். கடையில் விற்பனையை நான் பார்த்துக் கொண்டால், என் மாமியார் பேக்கிங் செய்ய உதவி செய்வாங்க. அவங்க பங்களிப்பும் என் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். தற்போது 2000 சதுரடியில் குடோன் அமைத்திருக்கிறோம். இரண்டு பேர் ெகாண்டு ஆரம்பித்தேன். தற்போது ஒன்பது பேர் வேலை பார்க்கிறார்கள்.

இன்ஸ்டாவில் பொம்மைகள் குறித்த வீடியோவினை நானே போட ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்களிடம் குழந்தைகளுக்கான பிரைன் கேம்ஸ் டாய்ஸ், பசில்ஸ், கிரியேட்டிவ் டாய்ஸ், ஃபேமிலி கேம்ஸ், வாகனங்கள், ஸ்கூல் பேக்ஸ், ஸ்டேஷனரி, லன்ச் பாக்ஸ் என 2000க்கும் மேற்பட்ட வகைகளில் பொம்மைகளும் பொருட்களும் உள்ளன. சின்ன பொம்மை என்றாலும் திறன் மேம்பாட்டிற்கு ஏற்ப இருக்கும். மொத்தமாகவும் சில்லறையாகவும் பொம்மைகளை விற்பனை செய்கிறோம். காம்போ ஆஃபர்களும் உள்ளன’’ என்றவர் பெண்களுக்கான ஆடைகளையும் விற்பனை செய்கிறார்.

‘‘மரப்பொம்மைகளை பொறுத்தவரை அதன் தரத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம். பொம்மைகளில் பயன்படுத்தப்படும் பெயின்டுகள் மற்றும் மரத்தின் தரம் ஆகியவற்றை பார்த்துதான் பொம்மைகளை வாங்குகிறோம். ஒவ்வொரு பொம்மையும் நான் நேரடியாக சென்று பார்த்துதான் வாங்குகிறேன். குறிப்பாக இயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட பொம்மைகள்தான் எங்களிடம் உள்ளன. அதுதான் எங்களுக்கான அடையாளத்தினை கொடுத்திருக்கிறது.

அதனால் தரத்தில் எப்போதும் காம்பரமைஸ் செய்வதில்லை. கஸ்டமைஸ்டு டாய்ஸ், பர்த்டே கிஃப்ட்ஸ், ரிட்டன் கிஃப்ட் ஆகியவற்றை ஆர்டரின் பெயரில் அதிக எண்ணிக்கையில் செய்து தருகிறோம். வாட்டர் பாட்டில், பென்சில், டாய்ஸ் போன்றவற்றில் பெயர் அச்சிட்டு தர சொல்லி கேட்பார்கள். அவ்வாறும் செய்து தருகிறோம். அதற்காக புதியதாக அந்த பிரின்டிங் மிஷினையும் சொந்தமாக வாங்கியுள்ளோம். அம்மாக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஏழு வருடத்திற்கு முன் ஆரம்பித்த இந்த பிசினஸ் எனக்கான அடையாளமாகவே மாறிவிட்டது’’ என்கிறார் மோகனப்பிரியா குமரேசன்.

செய்தி: கலைச்செல்வி