நன்றி குங்குமம் தோழி
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2026 Asian Games ஜப்பானின் ஐச்சி-நாகோயா நகரில் கடந்த செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை சிறப்பாக நடந்தன. இதில் இந்தியா 85 பதக்கங்களை வாங்கி குவித்து, ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியப் பெண்களின் பங்களிப்பை பதக்கங்களின் எண்ணிக்கையால் மட்டுமே அளவிட முடியாது.
தனிநபர் திறமை, அணியின் ஒற்றுமை, நீண்டகாலப் பயிற்சி, மன உறுதி ஆகியவற்றின் மூலம் பல வீராங்கனைகள் இந்திய விளையாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தினர். வில்வித்தை, கோல்ஃப், துப்பாக்கிச்சுடுதல், குத்துச்சண்டை, தடகளம், ஹாக்கி, கிரிக்கெட், கபடி போன்ற பல துறைகளில் பெண்கள் சிறப்பாக பங்காற்றினர்.
கும்கும் அனில் மொஹோத் - வில்வித்தையில் இந்தியாவின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றை நிகழ்த்தியவர் கும்கும். மகளிர் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், இந்தப் பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார். பெண்கள் அணி ரீகர்வ் பிரிவிலும் தங்கம் வென்றார். கலப்பு ரீகர்வ் அணியில் தீரஜ் பொம்மதேவராவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
நீருதண்டா- துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று, 1978க்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைக்காத நீண்ட இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கலப்பு டிராப் பிரிவில் கைனன் செனாயுடன் இணைந்து தங்கம் வென்றார். இந்த வெற்றியில் 40 இலக்குகளில் 34-ஐ தாக்கிய இந்திய இணை ஆசிய சாதனையையும் பதிவு செய்தது. மகளிர் டிராப் அணிப் பிரிவில் ஆஷிமா அஹ்லாவத், மனிஷா கீர் ஆகியோருடன் இணைந்து வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
லவ்லினா போர்கோஹைன்-குத்துச்சண்டையில் மகளிர் 75 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு மேரிகோம் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
பர்வீன் ஹூடா - மகளிர் 65 கிலோ குத்துச்சண்டைப் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சீன தைபேயின் சென் நியென்-சின்னை இறுதிப் போட்டியில் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். சில காலம் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழலை எதிர்கொண்டிருந்தவர், மீண்டும் உயர்நிலைக்குத் திரும்பி ஆசிய அரங்கில் தங்கம் வென்றது அவரது சாதனையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி - ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. இதன் மூலம் முந்தைய 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெற்ற தங்கத்தை மீண்டும் தக்கவைத்தது. தனிநபர் திறமையை தாண்டி, அணியின் ஒருங்கிணைப்பு, அழுத்தமான தருணங்களில் முடிவெடுக்கும் திறன், ஆட்டத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒழுங்கு ஆகியவை இந்த வெற்றியின் முக்கிய அம்சங்கள்
பிரணவி உர்ஸ் - கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனையாக சாதனை படைத்தார். பொதுவாக கிரிக்கெட், ஹாக்கி, தடகளம் போன்ற விளையாட்டுகளுக்குக் கிடைக்கும் கவனத்தைத் தாண்டி, கோல்ஃப் போன்ற விளையாட்டுகளிலும் இந்தியப் பெண்கள் ஆசிய அளவில் உச்சத்தைத் தொட முடியும் என்பதை நிரூபித்துள்ளார். இந்திய மகளிர் கோல்ஃப் அணியும் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி - சீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, 1982-க்குப் பிறகு முதன்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது. லால்ரெம்சியாமி அடித்த கோல் வெற்றிக்கு வழிவகுத்தது. கோல் கீப்பர் சவிதா புனியாவின் முக்கியமான தடுப்புகளும் அணியின் தற்காப்பு ஆட்டமும் வெற்றியில் பங்கு வகித்தன. இந்த வெற்றியுடன் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான நேரடித் தகுதியையும் இந்திய அணி பெற்றது.
இந்திய மகளிர் கபடி அணி - இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது. உடல் வலிமை, மின்னல் வேக முடிவுகள், அணியினரிடையேயான புரிதல், கடைசி நொடி வரை போராடும் மனநிலை ஆகியவற்றின் கூட்டுச் சாதனையாக இந்த வெற்றி அமைந்தது.
மீராபாய் சானு - மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற அனுபவம் கொண்ட மீராபாய், ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தனது பதக்கப் பட்டியலில் புதிய சாதனையை சேர்த்தார். 1998-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு இந்த விளையாட்டில் கிடைத்த முதல் ஆசிய விளையாட்டுப் பதக்கம் இதுவாகும்.
பரணிகா இளங்கோவன் - மகளிர் கோலூன்றித் தாண்டுதலில் வெண்கலம் வென்று, இந்தப் பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
நவோரெம் ரோஷிபினா தேவி - மகளிர் 60 கிலோ சாண்டா பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மணிப்பூரைச் சேர்ந்த இவர், வுஷு விளையாட்டில் இந்தியாவின் முக்கியமான வீராங்கனைகளில் ஒருவர்.
பாருல் சௌத்ரி - மகளிர் 3,000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் மற்றும் 5,000 மீட்டர் ஓட்டம் ஆகிய இரு பிரிவுகளிலும் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அன்சி சோஜன் - மகளிர் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். வேகம், உடல் சமநிலை, துல்லியமான தாவுதல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக விளங்கும் இந்தப் போட்டியில், சர்வதேச அளவில் இந்தியாவின் தடகளத் திறனை வெளிப்படுத்தினார்.
ஹரிதா பத்ரா - மகளிர் 200 மீட்டர் வேக ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். இந்தப் பிரிவில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த ஆசிய விளையாட்டுப் பதக்கம் என்ற சிறப்பும் அவரது சாதனைக்குக் கிடைத்துள்ளது.
ஜோதி சுரேகா வென்னம், பிரிதிகா பிரதீப், தனிபர்த்தி சிகிதா - மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணியில் மூவரும் இணைந்து தங்கப் பதக்கம் வென்றனர். அதே போட்டியில் தனிபர்த்தி சிகிதா, சாஹில் ராஜேஷ் ஜாதவுடன் இணைந்து கலப்பு காம்பவுண்ட் பிரிவிலும் தங்கம் வென்றார். வில்வித்தையில் இந்தியாவின் வலிமை தனிநபர் சாதனைகளில் மட்டுமல்ல, அணிப் பிரிவுகளிலும் வெளிப்பட்டது.
ஹரிதா பத்ரா - மகளிர் 200 மீட்டர் வேக ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். இந்தப் பிரிவில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த ஆசிய விளையாட்டுப் பதக்கம் என்ற சிறப்பும் அவரது சாதனைக்குக் கிடைத்துள்ளது.
வித்யா ராம்ராஜ் - மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் அவரது செயல்பாடு, 1984ம் ஆண்டிலிருந்து பி.டி.உஷாவின் பெயரில் இருந்த தேசியச் சாதனையை முறியடித்ததாகப் பதிவானது.
இளவேனில் வாலறிவன் - மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் பிரிவிலும், அதே பிரிவின் அணிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
தொகுப்பு: ஆர்.ஆர்


