Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

738 நாட்கள் மரத்தின் உச்சியில் வாழ்ந்த பெண்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு மரத்தை வெட்டாமல் காப்பாற்ற, அதன் உச்சியில் மேடை அமைத்து, தரையில் கால் வைக்காமல் 738 நாட்கள் வாழ முடியுமா? இயற்கை மீதான நேசத்தால், முடியுமென செய்து காட்டி இருக்கிறார் அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜூலியா பட்டர்ஃபிளை ஹில் (Julia Butterfly Hill).அவர் தங்கியிருந்த ஆயிரம் ஆண்டு பழமையான ரெட்வுட் மரத்தின் பெயர் ‘லுனா’ (Luna). இது சுமார் 200 அடி உயரமும், 40 அடி சுற்றளவும் கொண்டது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில், ஹம்போல்ட் கவுண்டி பகுதியில், Stafford என்ற குடியிருப்புக்கு மேலுள்ள மலைப்பகுதியில் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது இந்த லுனா மரம் (Coast Redwood).

வரலாற்றில் இந்த மரம் ஒரு உலகளாவிய அடையாளமாய் பார்க்கப்படுகிறது. காரணம், ஒரு தனி மனிதரின் உறுதியும், சமூகத்தின் ஒற்றுமையும் இணைந்தால், இயற்கையை பாதுகாக்க முடியும் என்பதற்கு உயிருள்ள அடையாளமே லுனா. லுனா மரம் சுமார் 1,000 முதல் 1,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கணிக்கப்பட்டுள்ளது.

‘பசிபிக் லம்பர்’ (Pacific Lumber Company) என்ற மர நிறுவனம் இந்த காட்டை அழிக்கத் திட்டமிட்டபோது, அங்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த மரத்தின் கீழ் ஒரு முகாமை அமைத்தனர். அப்போது வானில் தெரிந்த பிரகாசமான முழு நிலவைப் (Moon) பார்த்து, மரத்திற்கு ‘லுனா’ என (லத்தீன் மொழியில் Luna என்றால் நிலவு என்று பொருள்) பெயரிட்டனர்.போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1997 டிசம்பர் 10ல், 23 வயது ஜூலியா பட்டர்ஃபிளை ஹில், ரெட்வுட் மரமான லுனா மீது ஏறினார். ஆரம்பத்தில் சில வாரங்கள் மட்டுமே மரத்தில் தங்க ஜூலியா நினைத்திருந்தார். ஆனால், போராட்டம் நீண்டு கொண்டே சென்றது. இறுதியில், 738 நாட்கள் மரத்தின் மீது இருந்து, ஒருமுறைகூட தரையில் அவர் கால் வைக்கவில்லை.

தரையிலிருந்து சுமார் 180 அடி உயரத்தில், பயன்படுத்தப்பட்ட மரப்பொருட்களைக் கொண்டு சிறிய மேடை ஒன்று அமைக்கப்பட்டது. மேடை மீது கூடாரம் அமைத்து ஜூலியா அதில் வாழத் தொடங்கினார். மரத்தில் வாழ்ந்த காலத்தில், கடுமையான பனிப்புயல், தொடர் மழை, எலும்பை உறைய வைக்கும் குளிர் என இயற்கையின் சவால்களையும், தனிமை மற்றும் மரத்தை வெட்ட வந்தவர்களின் மிரட்டல்களையும் எதிர்கொண்டு அங்கேயே தங்கினார். கூடாரத்தின் மேற்பகுதியில் சேகரிக்கப்பட்ட மழைநீரை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தியதுடன், உணவு, கடிதங்கள் மற்றும் அவருக்குத் தேவையான பொருட்களை, நண்பர்கள் ஒரு பையில் வைத்து மலைமீது ஏறிக் கொண்டுவர, கயிற்றின் உதவியுடன் அவற்றை ஜூலியா மேலே இழுத்துக் கொள்வார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தனது கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல, மரத்தில் இருந்தபடியே ஊடகங்களுக்கு பேட்டிகளும் அளித்தார். ஜூலியாவின் இந்த அசாத்தியப் போராட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.இறுதியில், டிசம்பர் 18, 1999 மரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை உருவாக்கும் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

பசிபிக் லம்பர் நிறுவனம் லுனா மரத்தையும் அதைச் சுற்றியுள்ள 200 அடிப் பகுதியையும் வெட்ட மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகே ஜூலியா மரத்தை விட்டு கீழே இறங்கினார்.ஒப்பந்தத்தின்படி லுனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும் வகையில் Conservation easement ஏற்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மரத்தின் உச்சியில் வாழ்ந்த ஜூலியாவின் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், லுனாவின் கதை முடிந்துவிடவில்லை.

ஆம்! ஜூலியா கீழே இறங்கிய அடுத்த ஆண்டே, 2000 நவம்பரில், மர்ம நபர் ஒருவர் லுனாவின் அடி மரத்தை Chainsaw மூலம் வெட்ட, மரத்தின் தண்டில் சுமார் 3 அடி ஆழத்திற்கு வெட்டு ஒன்று அதன் சுற்றளவில் பாதி வரை விழுந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இதில் மரத்தின் உயிரியல் செயல்பாடுகளுக்கும், அதன் கட்டமைப்பு நிலைத்தன்மைக்கும் பேராபத்து ஏற்பட, மரம் விழுந்துவிடும் என்ற ஆபத்தான சூழ்நிலையில், மரத்தை காப்பாற்ற மர ஆர்வலர்களும், சிறந்த தாவரவியல் நிபுணர்களும், பொறியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் இணைந்து பெரிய எஃகு கம்பிகள் (Steel cables and brackets) மூலம் மரத்திற்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றினர். லுனா மீண்டும் தப்பித்தது.

Sanctuary Forest பதிவின்படி, அந்தக் கொடூரத் தாக்குதலில் இருந்தும் மீண்டு வந்த லுனா மரம் இன்றும் வளர்ந்து, புதிய கிளைகளை உருவாக்கித் தொடர்ந்து உயிருடன் உள்ளது. லுனா ஒரு பழமையான மரம் மட்டுமல்ல... இந்த மரத்தின் பாதுகாப்பு மற்றும் Conservation easement-ஐ Sanctuary Forest தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது. சில நேரங்களில் நாம் நம்பும் ஒன்றைக் காப்பாற்ற, அதற்காக அசையாமல் நிற்க வேண்டியிருக்கும். அது 200 அடி உயரத்தில் இருந்தாலும் சரி... 738 நாட்களாக இருந்தாலும் சரி! ‘லுனா’ மரம் இதற்கு ஒரு வாழும் சாட்சி.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்