நன்றி குங்குமம் தோழி
உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்காக... நீங்க நேசிக்கிற ஒருத்தருக்காக... எந்த எல்லைவரை போவீங்க? எவ்வளவு பெரிய ஆபத்த சந்திக்க தயாரா இருப்பீங்க? அதையும்தான் இங்கே பாத்திருவோமா? அது 1986ம் வருடம். பிரான்ஸ் தலைநகரம் பாரிஸ். பகல் நேரம். நகரத்தோட மையத்தில இருக்கிற லாஸ் சாண்டே சிறை சாதாரணமான இடம் கிடையாது. மிகக் கடுமையான பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை. அங்கிருந்து தப்பிப்பது சாத்தியமில்லாத விசயம்.
ஒரு ஹெலிகாப்டர் மிகச் சரியா அந்த சிறையோட கூரைக்கு மேல வந்து நிக்குது. சிறைக்குள் இருக்கிற கைதிகள், வெளிய காவலுக்கு நிக்கிற ஆயுதம் ஏந்திய காவலர்கள் என எல்லோருமே திடீர்னு வானத்தை அண்ணாந்து பாக்குறாங்க. காவலர்கள் அனைவரும் துப்பாக்கிய நீட்றாங்க. ஆனா, யாரும் சுடல. எல்லாமே உறைஞ்சு போன ஒரு தருணம் அது.சிறையோட கூரையிலிருந்து ஒரு கைதி பாய்ந்து, அந்த ஹெலிகாப்டரோட அடிப்பகுதியை பிடிச்சு தொங்க, அடுத்த வினாடி அந்த ஹெலிகாப்டர் பாரிஸ் வானத்தில சடசடவென பறந்து மறையுது.
கேக்குறப்பவே ஆ க் ஷன் படத்தோட கிளைமாக்ஸ் மாதிரி த்ரில்லா இருந்தாலும், இதில் ஆச்சரியம் என்னன்னா, ஹெலிகாப்டர ஓட்டி வந்த பைலட் ஒரு பெண் என்பதே. அவர் வேறு யாருமல்ல, ஹெலிகாப்டரைப் பிடித்து தொங்கியபடி தப்பிச் சென்ற கைதியின் மனைவியே அந்த பைலட்.
ஆச்சரியமா இருக்குல. என்னதான் நடந்தது அந்த சிறையில்?
ஒரு பெரிய வங்கி கொள்ளை வழக்கில் மாட்டிய மிஷல் ஓஜூர் என்பவர் லாஸ் சாண்டே சிறையில் அடைக்கப்பட, அவர் மனைவி நதின் ஓஜூர் தன் கணவனை மீட்க மிகவும் தந்திரமாக ஒரு முடிவு எடுக்கறாங்க. சாதாரணமாக வீட்டில் யாருக்காவது சர்ப்ரைஸா ஒன்றை செய்ய நினைச்சாலே நம் முகம் காட்டி கொடுத்துரும். ஏதோ ரகசியத்தை மறைக்கிறோம்னு வெளியில் தெரிஞ்சிரும். ஆனால், ஒரு பெண் காவல்துறை, சிறை நிர்வாகம்னு எல்லார் கண்ணுலையும் மண்ணை தூவிவிட்டு, ஒரு பெரிய ஆபரேஷனுக்கு தன்னை தயார்படுத்த எவ்வளவு பெரிய தைரியம் வேணும்.
நதின் ஓஜூர் முழுமையாக ஆறு மாதங்கள் யாருக்கும் தெரியாமலே ஹெலிகாப்டர் ஓட்ட பயிற்சி எடுக்கிறார். ஹெலிகாப்டர் ஓட்டுவது கார் ஓட்டுற மாதிரி ஈஸி கிடையாது. தன் அடையாளத்தை மாற்றி, லீனா ரிகோன் என்கிற கற்பனை பெயரை உருவாக்கி, பயிற்சி மையத்தில் இணைந்து, ஹெலிகாப்டரை இயக்குவது எப்படி? வானிலையை கணிப்பது எப்படி? திசைகளை கண்டுபிடிப்பது எப்படின்னு கத்துக்குறாங்க.
தன் கணவனை சிறைக்குள் இருந்து எப்படியாவது வெளியே கொண்டு வரணும் என்கிற ஒற்ற இலக்கு மட்டுமே நதினுக்குள் அந்த ஆறு மாசமும் ஓடியிருக்கு. தான் உருவாக்கின லீனா ரிகான் என்கிற பெயரிலேயே நதின் ஒரு அலுவேட்-2 ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, நேராக லாஸ் சாண்டே சிறை நோக்கி பறக்குறாங்க.
அலுவேட்-2 மிக லேசான லைட் வெயிட் ஹெலிகாப்டர். ஆனால், அதிவேகமாக செயல்படக்கூடியது. அதன் டிசைன் ஒரு வெளிப்படையான கண்ணாடி கூண்டு மாதிரி இருக்கும். இதனால் பைலட்டுக்கு நாலு பக்கமும் பார்வை தெளிவாகக் கிடைக்கும்.
முற்றிலும் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கும்போது, என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கவே மூளைக்கு நேரம் தேவைப்படும். மூளை சில நொடிகள் உறைஞ்சு போயிடும். இப்போ நீங்க தெருவுல நடந்து போகும்போது எதிரே திடீர்னு ஒரு சிங்கம் வந்தா எப்படியோ, அதுபோலதான் இதுவும்.இன்னொரு மிக முக்கியமான காரணம் சிறைக்கு மேல வட்டமிடுற ஒரு ஹெலிகாப்டர நோக்கி காவல்துறை துப்பாக்கியால சுட்டு, அதனால் பைலட் குண்டடிப்பட்டு இறந்தாலோ அல்லது இன்ஜின் பழுதானாலோ ஹெலிகாப்டர் நேராக சிறைக்குள்ளேயே விழுந்து வெடிக்கும். இதில் கைதிகளும் சக காவலர்களும் உயிரிழக்கவும் நேரலாம்.
இந்த மிகப்பெரிய ஆபத்தை மனசுல வைத்தே காவலர்களால் உடனடியாக சுட முடியவில்லை. அதுவும் ஹெலிகாப்டர ஓட்டுறது யாரு? உள்ள வேற ஆயுததாரிகள் இருக்காங்களா என்கிற எந்த தகவலுமே காவலர்களுக்குத் தெரியாது. இந்த குழப்பங்களுக்கு நடுவில் மிஷல் ஓஜூர் அந்த ஹெலிகாப்டர் ஸ்கிட்ட பிடித்து தொங்கியபடியே தப்புகிறார்.எந்த ஒரு பாதுகாப்பு பெல்ட்டும் இல்லாமல், ஹெலிகாப்டர் அதிர்வுக்கும், சுழலும் இறக்கையோட காற்றுக்கும் நடுவே, தன் முழு உடல் எடையையும், கைகளால் தாங்கிப் பிடித்து வானத்தில் பறப்பது மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கும் செயலே.
சிறையில இருந்து கணவனை மீட்டதும் நதின் ஓஜூர் ஹெலிகாப்டரை நீண்ட தூரம் கொண்டு செல்லவில்லை. சிறைக்கு அருகிலுள்ள சிதே யுனிவர்சிட்டர் என்ற பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் தரை இறக்குகிறார். இறங்கியதுமே இருவரும் அங்கிருந்து தப்பிக்கின்றனர்.தன் கணவனுக்காக உலகத்தையே எதிர்த்து ஜெயிச்சுட்டோம் என்கிற உணர்வு நதினுக்கு அப்போது இருந்திருக்கலாம். ஆனால், வானத்தில் பறந்து பெற்ற அந்த சுதந்திரம் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.
மே 26ம் தேதி தப்பிய மிஷல், அதே வருடம் செப்டம்பர் 26ல் மீண்டும் ஒரு வங்கிக் கொள்ளை முயற்சியில ஈடுபடும்போது, காவல்துறையில் சிக்குகிறான். சிறையிலிருந்து தப்பிப்பது, ஒரு கைதி இருக்கிற இடத்தை மட்டுமே மாற்றுமே தவிர அவன் மனசின் இயல்பை மாற்றாது. அதுவும், மிஷல் ஓஜூர் சாதாரணக் குற்றவாளி கிடையாது. தொழில்முறை வங்கிக் கொள்ளையர் அவர்.
தன் மனைவி தனக்காக இவ்வளவு பெரிய தியாகத்தை செய்திருக்கிறார் என்கிற நன்றி உணர்வை விட, தன் குற்ற புத்தியும், ஆபத்தான வாழ்க்கை முறை மீதான ஆசையுமே மிஷலிடம் மேலோங்க, தப்பிய சில மாதங்களிலே மீண்டும் தனது பழைய வங்கிக் கொள்ளை திருட்டு வேலையை காட்டத் தொடங்கினார். அப்போது, காவல்துறையோடு நடந்த மிகப்பெரிய துப்பாக்கி சண்டையில் மிஷல் ஓஜூருக்கு தலையில் துப்பாக்கி குண்டு பாய, பலத்த காயத்துடன் கைது செய்யப்பட்டார். வானத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு மனிதன் மீண்டும் அதே பாரிஸ் நகர தெருவில் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தான்.
மிஷல் ஓஜூர் பிடிபட்ட பிறகு நதீன் ஓஜூர் நிலைமையும் கேள்விக்குறியானது. தன் கணவனை காப்பாற்ற மிகப் பெரிய திட்டத்தை தீட்டிய பெண்ணால், தலைமறைவு வாழ்வை தொடர முடியவில்லை. அவரும் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். எந்த சிறையில இருந்து கணவனை நதீன் மீட்டாரோ அதே சிறைக்குள் அவரும் அடைக்கப்பட்டார்.
கணவன் மீதான அதீத அன்பால், ஒரு சாதாரண பெண்ணால் ஆறு மாதங்கள் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கண்களில் மண்ணை தூவி, ஹெலிகாப்டர் ஓட்டக் கற்று, பாரிஸ் மாதிரியான நெருக்கடியான நகரத்தில், உயர் பாதுகாப்பு சிறைக்கு மேல், ஹெலிகாப்டரை சாதுர்யமாக வட்டமிட செய்து, தன் கணவனை மீட்டு, பிறகு சிறிய கால்பந்து மைதானத்தில பத்திரமாக தரை இறக்க முடிந்தது.
இவ்வளவு பெரிய ஆபரேஷனை தனியாளாக திட்டமிட்டு செயல்படுத்துகிற அளவுக்கு அசாத்திய மூளையும், நிர்வாகத் திறனும், எல்லாத்தையும் தாண்டி ஒரு அசுர தைரியமும் அந்தப் பெண்ணுக்குள் இருந்திருக்க வேண்டும்.இந்த திறமையை ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கவோ அல்லது ஒரு பெரிய சமூக மாற்றத்துக்காகவோ நதின் பயன்படுத்தி இருந்தால், இந்த உலகத்தில எவ்வளவோ பெரிய சாதனைகளை படைத்திருக்க முடியும். தவறான ஒரு மனிதன் மேல் வைத்த கண்மூடித்தனமான காதல், ஒரு மிகப்பெரிய மேதையின் திறனையே வீணாக்கிவிட்டது.
அதீத அன்பும், விசுவாசமும், அர்ப்பணிப்பும் மிகச்சிறந்த குணங்களே. ஆனால், அவை யாருக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதும் மிக முக்கியம். தகுதியற்ற ஒரு மனிதனுக்காகவோ அல்லது மாற மறுக்கிற ஒரு குற்றவாளிக்காகவோ இந்த குணங்கள் கண்மூடித்தனமா பயன்படுத்தப்படும்போது, அது எப்படிப்பட்ட முழுமையான அழிவை கொண்டு வரும் என்பதே ஓஜூர் தம்பதியினர் கதை.அன்பிற்காக நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள் என்கிற கேள்வியை போலவே, அந்த அன்பு சரியான இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறதா என்கிற விழிப்புணர்வும் நமக்கு தேவை.
தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்


