நன்றி குங்குமம் தோழி
‘‘சருமப் பராமரிப்புக்கு சோப், பேஸ்வாஷ் என பல வகைகள் இன்று மார்க்கெட்டில் உள்ளது. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் இன்று வரை நான் இது போன்ற சோப் மற்றும் பேஸ்வாஷ்களை பயன்படுத்தியது இல்லை. வீட்டில் அம்மா அரைத்து தரும் நலங்கு மாவு உடம்பிற்கும் சீயக்காய் ெபாடி தலைக்கும் இன்று வரை பயன்படுத்தி வருகிறேன். அதுவே இன்று எங்க இருவரின் பிசினஸாக மாறியுள்ளது’’ என்கிறார் சேலத்தைச் சேர்ந்த ஸ்வாதி. இவர் ‘மாம் மேட் பிராடக்ட்ஸ்’ என்ற பெயரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய சருமம், தலைமுடி பராமரிப்பு, சிறுதானியம் மிக்ஸ் மற்றும் மசாலாக்கள் ேபான்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
‘‘இந்த பிசினஸை நானும் அம்மாவும் சேர்ந்துதான் செய்கிறோம். பொருட்களை தயாரிப்பது எல்லாம் அம்மாதான். அதற்கான ஆர்டர்களை பிடிப்பது, மார்க்கெட்டிங் செய்வது என்னுடைய வேலை. நான் திருமணமாகி அமெரிக்காவில் இருந்தேன். நான் என் குழந்தைக்கான சாப்பாடு குறித்த வீடியோவினை இன்ஸ்டாவில் பதிவு செய்தேன். நம்ம ஊரில் குழந்தைகளுக்கு அம்மாக்கள் சாப்பாடு ஊட்டுவாங்க. அடம் பிடித்தாலும் நிலா, சாலையில் திரியும் நாய், பூனைகளை காண்பித்து சாப்பிட வைப்பார்கள். அங்கு அப்படி இல்லை. குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களின் உணவினை அவர்களே சாப்பிட பழக்குவார்கள்.
அது குறித்த வீடியோவினைதான் நான் பதிவு செய்து வந்தேன். அதில் என் குழந்தைக்கான சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு குறித்து குட்டி ஸ்டோரி ெசால்லி இருந்தேன். அதைப் பார்த்து பலர் நான் பயன்படுத்தும் நலங்கு மாவு, சீயக்காயினை விற்பனைக்கு தரச்சொல்லி கேட்டார்கள். அப்பதான் இதை ஏன் பிசினஸா செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. நான் அப்போது அமெரிக்காவிலும், அம்மா சேலத்திலும் இருந்ததால், ஆன்லைன் மூலமாக ‘மாம் மேட் பிராடக்ட்ஸ்’ என்ற பெயரில் விற்பனையை துவங்கினோம்’’ என்றவர் அதன் செயல்பாடு குறித்து விவரித்தார்.
‘‘நான் அம்மாவிடம் இது குறித்து சொன்ன போது, முதலில் ஆன்லைனில் செய்ய முடியுமான்னு யோசித்தாங்க. மார்க்கெட்டிங் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். பொருட்களை மட்டும் நீங்க தயார் செய்யுங்கன்னு சொன்னேன். அப்படித்தான் என்ன பொருட்களை விற்பனைக்கு கொடுக்கலாம்னு நானும் அம்மாவும் முதலில் பேசி முடிவு செய்தோம். அதற்கு முதல் கட்டமாக தயாரிக்கும் பொருட்களுக்கு தரச்சான்றிதழ் பெற வேண்டும். வீட்டில் சிறிய அளவில் தயாரித்து பயன்படுத்தி வந்தோம். ஆனால் மார்க்ெகட்டில் விற்பனை செய்யும் போது அதற்கான உரிய சான்றிதழ் அவசியம். நாங்க தயாரித்த பொருட்களை ஆய்வகத்திற்கு அனுப்பி முறையான சான்றிதழ் பெற்றோம்.
சருமத்தில் பயன்படுத்தும் நலங்கு மாவு மட்டுமில்லாமல் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ரோஸ் எண்ணெய்தான் எங்களின் சிறப்பு. பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் சருமம் வழவழப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். எங்களின் பொருட்களில் எந்தவித ரசாயனங்களும் நாங்க கலப்பதில்லை என்பதால் குழந்தைகளுக்கு தயக்கம் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் தற்போது சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கும் கிட்டில் தருகிறார்கள்.
இவை தவிர பொடுகு, தலைமுடி உதிராமல் இருக்கவும் எண்ணெய் தயாரிக்கிறோம். அழகு பொருட்களைத் தொடர்ந்து குழம்பு மசாலாப் பொடிகள் மற்றும் சிறுதானிய மிக்ஸ் போன்றவற்றையும் விற்பனை செய்கிறோம். இரண்டு பொருட்களில் ஆரம்பித்தோம். இப்போது 35 பொருட்கள் உள்ளது’’ என்றவர், இதன் மூலப் பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை
குறித்தும் விவரித்தார்.
‘‘ஒவ்வொரு பொருள் தயாரிக்கும் போதும் நானும் அம்மாவும் அது குறித்து டிஸ்கஸ் செய்வோம். அதன் பிறகு எந்த மூலப்பொருட்களை சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து ஆய்வு செய்வோம். அம்மா இது குறித்து நிறைய புத்தகங்களை படித்து தெரிந்து ெகாண்டாங்க. அதன் பிறகு நாங்க அதற்கான பார்முலாவை தயார் செய்வோம். இதில் சில பொருட்களை குழந்தைகள் பயன்படுத்தும் எண்ணெயில் சேர்க்க முடியாது. அதனால் அவர்களுக்கான எண்ணெயில் நான்கு பொருட்கள் மட்டுமே சேர்க்கிறோம். இந்த எண்ணெயை இரண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயும் இரண்டு வகையாக தயாரிக்கிறோம்.
ஒன்று சாதாரண எண்ணெய். மற்றொன்று இன்ப்யூஸ்ட் ஹேராயில். இரண்டாம் ரகம் பொடுகு பிரச்னையுள்ளவர்களுக்கு சிறந்தது. சருமத்திற்கு பயன்படுத்தும் கிரீமில் ரோஜா இதழ் மற்றும் குங்குமப்பூ இருப்பதால் அவை சருமத்தை பளபளப்பாக்கும். கிரீம் மட்டுமில்லாமல் சீரமும் உள்ளது. சிலருக்கு பச்சைப் பயிறு மாவு அலர்ஜி என்பதால், அவர்களுக்கு மட்டும் நலங்கு மாவினை கஸ்டமைஸ் செய்கிறோம்.
நாங்க ஒரு பொருளை தயாரித்தால் அதனை முதலில் நாங்க பயன்படுத்திப் பார்ப்போம். பிரச்னை இல்லை என்று தெரிந்த பிறகுதான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்வோம். எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாங்க கூறும் அறிவுரை ஒன்றுதான். பொருட்களை வாங்கியதும் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பதுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றால் மட்டுமே இதனை பயன்படுத்த அறிவுறுத்துகிறோம். காரணம், சில மூலிகைகள் சிலரின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்’’ என்றவர், முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில்தான் விற்பனை செய்வதாக கூறினார்.
‘‘இந்தத் தொழிலை ஆரம்பித்த போது வீட்டில் ஒரு சிறிய அறையில்தான் துவங்கினோம். ஆர்டர் வரத் துவங்கிய பிறகு இதற்கான தனி யூனிட் மற்றும் தொழிற்
கூடம் அமைத்தோம். இப்போது எங்களின் அனைத்துப் பொருட்களும் அங்கு தான் தயாராகி பேக்கிங் செய்யப்படுகிறது. ஆர்டர் தீர தீரதான் பொருட்களை தயாரிப்போம். அப்பதான் பொருளும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். தற்போது ஆன்லைனில்தான் விற்பனை செய்கிறோம். அடுத்து சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை கொடுக்க இருக்கிறோம். மேலும் எங்களின் பொருட்கள் மட்டுமே கிடைக்கக்கூடிய வகையில் எக்ஸ்க்லூசிவ் கடை ஒன்றையும் அமைக்க உள்ளோம்.
தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், இதற்கான இணையதளம் ஒன்றையும் திட்டமிட்டிருக்கிறோம். அதன் பிறகுதான் வேறு இடங்களில் கிளைகள் துவங்குவது குறித்து ஆலோசனை செய்ய இருக்கிறோம். ஆன்லைன் என்பதால் சேலம் மட்டுமில்லாமல் தமிழகம் மற்றும் வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்’’ என்றார் ஸ்வாதி.
தொகுப்பு: நிஷா

