Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதிதாய் பிறந்தோம்

நன்றி குங்குமம் தோழி

“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. சிவகாமி இங்க வா” என்று அழைத்தார்.மெதுவாக நடந்து அவர் காலடியில் அமர்ந்தாள். “மல்லிகைப்பூ வாங்கிட்டு வரச் சொல்லி கோவிந்தனை அனுப்பியிருக்கிறேன். வைச்சுக்கோ...” “அட போங்க...” வெட்கத்தில் புன்னகைத்து, “என்னமோ இப்பதான் கல்யாணமானது போல” என்று சங்கடத்தில் நெளிந்து சற்று தலை குனிந்தாள்.

“அட பாருடா” என கடகடவென அவர் சிரித்தார். “பெரிய வீட்டை விற்றுட்டேன். அதில் கிடைத்த ஏழு கோடியை இரண்டு குழந்தைகளுக்கும் சமமா பிரிச்சு கொடுத்துட்டேன்.”“இதுதாங்க என் மனசுக்கு உறுத்தலா இருக்கு...” லேசாக கண் கலங்கினாள்.“சிவகாமி மருமக கிட்ட அதிகமா பேசாதே, அவளுக்கு பிடிச்ச உடைய உடுத்தட்டும், அவங்க விரும்புற அசைவ உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடட்டும்.நீ எதையும் தடையும் சொல்லாதே புரிஞ்சுதா…’’சரிங்க தலையை ஆட்டினாள்.

“சிவகாமி நமக்கு கல்யாணம் ஆகி 40 வருஷம் ஆகுது...”

“ஆமாங்க, நாம மொத மொதல்ல சம்பாதிச்சு கட்டண வீடு. சந்தோஷமாக வாழ்ந்து ரஜினி பிறந்த வீடு” என்று அக்கால நிகழ்வுகள் கண்களில் காட்சி நிழலாடியது.“சிவகாமி, என் அம்மாவும், அப்பாவும் சேர்ந்து பல தான தர்மங்கள் செய்த வீடு...” பழைய நினைவலையில் பேசினார் தங்கவேலு.

“சந்தோஷமா பிரிச்சுக் கொடுக்க யாரு தடுத்தாங்க. நமக்குன்னு கொஞ்சம் சேர்த்து வச்சுக்கிட்டு நம்ம காலத்துக்கு பின்னால வித்து இருந்தால் நல்லா இருக்கும். அப்படி செய்யாம இப்போ வீட்டையே வித்தாச்சு...” “அட பைத்தியம், வீட்டை நேசித்து வாழ்ந்தது எல்லாம் உண்மைதான். நம்ம குழந்தைகள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா? இதுல ஏற்பட்ட திருப்தி, அலாதி இல்லையா” என்று அவர் பெருந்தன்மையோடு பேசிக்கொண்டு வரும்பொழுது சிவகாமி முகம் சூம்பியது.

“சொன்னா கோச்சுக்க கூடாதுங்க... நமக்கென கொஞ்சம் பணம் வெச்சிருக்கணும். அதை விட்டுட்டு எல்லாத்தையுமா குடுத்துடுவீங்க...” “அடிப்போடி பைத்தியம்... நாம மூணாவது மனுஷனுக்கா கொடுத்தோம். நம்ம புள்ளைங்களுக்கு தானே, நம்பள அவங்க பத்திரமா பாத்துப்பாங்க. இத்தோட பேச்ச விடு... புள்ளைங்க வர்ற நேரம். கேட்டா கஷ்டப்படுவாங்க...” சமாதானம் செய்தார். ‘‘எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க... ‘ஆத்துல போட்டாலும் அளந்து போடணும். சேர்த்து வச்சாலும் கண்ணுக்கு மறவா சேர்த்து வைக்கணும்.’ ஆனா, அதுக்கு மாறா ஆத்துல போட்ட மாதிரி எல்லாத்தையும் அவங்களுக்கு தூக்கி கொடுத்திட்டோம். “சிவகாமி நான் மறுபடியும் சொல்றேன் நம்ம பிள்ளைகளுக்குத்தானம்மா கொடுத்தேன்...” “தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற வேற இல்லீங்களாங்க.

சரி சரி வீட்டுக்காரங்க வரும்பொழுது சாவி கொடுத்துட்டு கிளம்புவோம். மத்ததெல்லாம் தேவையில்லாமல் மனசு போட்டு குழப்பிக்காத. இந்த வீடு வாங்குறவங்களும் சந்தோஷமா இருக்கணும் புரியுதா...” “சரிங்க” என்று அவர்கள் கிளம்ப தயாரானார்கள். 4 மணிக்கு வாசலில் இரண்டு கார்கள் வந்து நின்றன. மகனும் மகளும் வந்திறங்கினர். ‘‘அம்மா, அப்பா ரெடியா?’’ என்று மகள் ரஜினி சந்தோஷத்தில் பரபரப்புடன் அழைத்தாள்.

அவளுக்கு எப்பொழுதுமே சந்தோஷம் என்றால் குதிப்பாள். கோபம் என்று வந்துவிட்டால், கையில் எதைக் கிடைத்தாலும் தூக்கி எறியக்கூடிய சுபாவம் உடையவள். எதிலும் லாபத்தைப் பார்க்கக்கூடியவள். வியாபாரியின் மனசு. இப்படியும் ஒரு பெண்ணை பெற்று விட்டோமே என்று அடி மனதில் எங்கோ ஓர் இடத்தில் வேதனை சிவகாமிக்கு உண்டு. ஆனால், அவள் சந்தோஷத்தில் குதிப்பதை பார்த்து என்ன பின்னால நடக்கப் போகிறதோ என்று இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘‘அம்மாவை அழைச்சிட்டு போறேன்... நீங்க அப்பாவை அழைச்சிட்டு போங்க அண்ணே, ஓகேவா!’’ ‘‘ஓகே ரஜினி, அப்பாவை நான் பாத்துக்குறேன்’’ என்று கூறியவாறு முன் வந்தான் மகன் சுதர்சன். சிவகாமிக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. “என்ன சொல்ற ரஜினி?” “ம்மா… நீங்க என் கூட வர்றீங்க...” “அப்பா ’’வாயைப் பிளந்தாள் சிவகாமி.

“அம்மா... அப்பா அண்ணன் கூட...” “நிறுத்து... அது புரியுது. ஏன் ஆளுக்கு ஒரு பக்கம் போகணும். ரெண்டு பேரும் சேர்ந்தே இருக்கலாமே?” “அம்மா, அண்ணாவிற்கும் ஆசை எனக்கும் ஆசை. அதனால ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கிட்டோம். அவ்வளவுதான்.” “என்னங்க” கணவனை ஏறெடுத்து நோக்கினாள்.“ஆமா, அம்மா உங்களுக்கு வயசாச்சு ஒண்ணா இருக்கணும்னு என்ன அவசியம்? ஒன்றும் இல்லையே...’’ “அதனால...” “ரஜினி, நிறுத்து உன் பேத்தல. சேர்த்த பணத்தை வேண்டுமனா ஷேர் பண்ணிக்கலாம். பெத்த உறவை கூட ஷேர் பண்ணி இருப்பீங்க...” “இதுல என்ன இருக்கிறது விக்கிற விலைவாசியில...” “விதண்டாவாதமாக பேசுற, மூடு வாய. அப்பா ஓரிடம்... நான் ஓரிடம் பிரிந்து வாழ எங்களால முடியாது ரஜினி.’’

‘‘டேய்! சுதர்சன், நீ எங்க ரெண்டு பேரை அழைத்துக்கொண்டு போடா... பேசுற பாரு பேச்சு” என்று கோபத்தில் கடுகடுத்து, “அம்மா விக்கிற விலைவாசிக்கு இரண்டு நபர்களை வைத்துக் கொண்டால் செலவு அதிகம். எனவே, நீங்க ரஜினி கூட போங்க... நான் அப்பாவா அழைச்சிட்டு போறேன்.’’ ‘‘வரவு செலவு கணக்கு பார்த்தாடா உங்களை படிக்க வச்சு வளர்த்தோம். இப்படி கணக்கு பாக்குறீங்க?’’ “பெத்தது, வளர்த்த கடமைக்கு நாங்க சரியாக பாத்துக்குறோம். நடுத்தெருவில விடலையேம்மா...’’‘‘வெட்டிக்கதை பேசுறதுக்கு இது நேரமில்லை. வாங்கப்பா மணியாகுது என் மனைவி கோச்சுக்குவா. அப்புறம் அவ அம்மா வீட்டுக்கு போயிட்ட பின்னாலே என்னால ஓட முடியாது...”‘‘பொண்டாட்டிக்கு பயப்படணும். வேண்டான்னு சொல்லல... ஆனா, பெத்தவங்கள பிரிச்சா...’’‘‘அம்மா ராமாயணம் கேட்க நேரமில்லை... சுருக்க கிளம்புங்கப்பா நேரம் ஆகுது...’’ பதைபதைத்தான் சுதாகர்.

“அம்மா! நீங்க சீக்கிரம் கிளம்புங்க. உங்க மாப்பிள்ளை வந்தா கத்துவாரு. அவங்க அம்மாவை விட்டுட்டு உங்கள அழைச்சிட்டு வர்றதுல அவருக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்ல. சீக்கிரமா கிளம்புங்க” என்று அவசரப்படுத்தினாள் ரஜினி. சிவகாமி கணவனை ஏறெடுத்து பார்த்தாள். “ஒரு நிமிஷம் இப்படி வாங்க” என்று தனியாகத் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றாள். “என்ன சிவகாமி, நீ என்ன கேட்க வர்றேன்னு எனக்கு புரியுது. நம்மால வாழ முடியாதா என்ன? இப்படி ஆளுக்கு ஒரு பக்கமா நம்ம பிரிந்து வாழணுமா? என்று கேட்கற... நான் நெனச்சது சரியா?”

‘‘ஆமாம்...’’ என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“நம்முடைய இத்தனை வருஷம் தாம்பத்தியத்தில் எத்தனையோ விதமான கோபதாபங்கள், எரிச்சல், சீண்டல், வெறுப்பு எல்லாத்தையும் ஒருத்தரோடு ஒருத்தரு பரிமாறி இருக்கோம். அதை எல்லாம் கடந்து நாம் ஒருவரை ஒருவர் ஒரு நாளும் விட்டுப் பிரிந்ததில்லை. இதெல்லாம் ஒரு சுகமான பூசல்கள். நம்முடைய ஊடலும் கூடலும் உப்பு பெறுவது போல தான் பிள்ளைகளை பெற்றோம். அவர்களால் நாம் பிரிய வேண்டுமா சொல்லு?” உன்னை பிரிந்து ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. அதனால, அவங்க கிளம்பட்டும்” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தங்கவேலு.

முகம் பூவாக மலர, “நிஜமாவா” சொல்றீங்க? அவங்க போகட்டுமா?” பதட்டத்தில் கேட்டாள். புன்னகையை சிந்திய சிவகாமி, “உங்களுடைய விருப்பம்தான் என்னுடைய

ஆசை. அதனால் பிள்ளைங்க போகட்டும் புரிஞ்சுதா” என்று இருவரும் சிரித்த முகத்துடன், ‘‘ரஜினி, சுதர்சன் உங்களுடைய விருப்பப்படி நீங்க கிளம்பலாம். நானும் அம்மாவும் எப்படியாவது வாழ்ந்து கொள்வோம். என்ன மணியாகுது ரெண்டு பேரும் கிளம்புங்க’’ என்று அவர்களை வழியனுப்பி கிளப்பினார்.

“அப்பா! உங்களுக்கு எங்க அருமை தெரியாது. அப்புறம் அப்புறம் நோய்னு வந்தா ஆஸ்பத்திரில படுத்து விட்டேன் பணத்தை கொண்டா எனக் கூப்பிடக் கூடாது சொல்லிட்டேன்” என்றான்

சுதர்சன். “ஊர் உலகத்துல எல்லார் கிட்டயும் என் பிள்ளைங்க காப்பாத்தல... என் புள்ளைங்க நிராதரவாக விட்டுட்டாங்க என்ற கட்டுக்கதையும் பேசக்கூடாது புரிஞ்சுதா” என்றாள் மகள் ரஜினி. ‘‘கஷ்டப்பட்டாலும் உங்க வாசப்படி ஏறி நாங்க நிக்க மாட்டோம் புரிஞ்சுதா” என்று குரல் கொடுத்தாள் சிவகாமி. “இவங்களுக்கு பட்டால்தான் புத்தி வரும்... வா ரஜினி” என்று தங்கையை அழைத்துக் கொண்டு சென்றான். ‘‘என்னங்க யோசிச்சு நிக்கிறீங்க...

இப்ப நாம எங்க போகப் போறோம். கேள்விக்குறி மனசுல எழும்புதாங்க’’ என்று சிரித்தவாறு கேட்டாள் சிவகாமி.‘‘எல்லாம் அந்த கண்ணபிரான் விட்ட வழி... பார்ப்போம்’’ என்று கூறிவிட்டு வீடு வாங்கியவரிடம் சாவி கொடுக்க காத்திருந்தனர். அந்த நேரத்தில் கொரியர் பாய் வந்து நின்றான்.

“தங்கவேல் என்றவர் யாரு?”

“நான்தான்...” “இந்தாங்க ரிஜிஸ்டர் போஸ்ட்’’ என்று கொடுத்தான். அதை வாங்கி பிரித்து படித்தார். முகம் ஆச்சரியத்தில் விரிந்தது.‘ஸ்ரீரங்கத்தில் இருந்து சிவகாமி...’ “ஸ்ரீரங்கமா...” என்று குரலை நீட்டினாள் சிவகாமி. “சிரஞ்சீவி தங்கவேலு சௌபாக்கியவதி சிவகாமிக்கு அநேக கோடி ஆசீர்வாதங்கள், உன்னுடைய தூரத்து உறவு சித்தப்பா ராசப்பன் பேசுறேன். உங்க அப்பா நான் கஷ்டப்பட்டப்போ நிறைய பணமாகவும் சொத்தாகவும் கொடுத்து உதவி செய்திருக்காங்க... அதன் மூலம் நான் நல்ல உயர்ந்த நிலையை அடைந்தேன். அப்போ எனக்கு ஒரு வீட்டை கொடுத்தாங்க. உங்க பூர்வீக வீடு அது. ஏழு தலைமுறை வீடு. அந்த வீட்ட என் பிள்ளைகளுக்கு கொடுக்க எனக்கு மனசு வரல்ல, உங்க அப்பா எனக்கு கொடுத்தது.

அவர் புள்ளைக்கு நான் கொடுத்துடணும்... அதுதான் தர்மம். என்னால அவங்க கொடுத்த பணத்தையோ, பொருளையோ எல்லாத்தையும் திருப்பி கொடுக்க முடியலன்னாலும், பூர்வீக வீட்ட திருப்பி கொடுக்கிறதுதான் என் கடமை.அதனால நீ ஸ்ரீரங்கம் வந்து உன்னுடைய வீட்டை வாங்கிக்கோ... மனப்பூர்வமாக சுயநினைவோடு இருக்கும் பொழுது உனக்கு உயில் எழுதி ரிஜிஸ்ட்ரேஷனும் செய்து விட்டேன். உன் வீட்டை நீ பெற்றுக் கொள். நிம்மதியாக வாழ வேண்டும். இதுவே இந்த சித்தப்பாவின் ஆசை.’’ இப்படிக்கு நன்றி மறவாத ராசப்பன்.

படித்தவுடனே அவர் கண்களில் பொல பொல கண்ணீர் உருண்டு விழுந்தது. ‘‘பெத்த பிள்ளைகள் என்ன கைய விட்டாலும், என்னை பெத்தவங்க யாருக்கோ செய்த ஒரு சின்ன புண்ணியம் இப்போ வழி தேடி நம்ம கிட்ட வந்து சேர்ந்து இருக்கு. ஸ்ரீரங்கம் போறோம்... அங்கே ‘உறவுக்கு சங்கமம்’ என்று அந்தப் பெயரினை வீட்டிற்கு வைத்து ஆதரவின்றி தவிக்கும் பெற்றோர்களுக்கு, நம்ம சங்கமம் வாழ்வளிக்கும். பொறுப்புகள் நமக்கு காத்திருக்கு... வாங்க, நாம மீண்டும் புதிதாய் பிறந்தோம் என்று இந்த பூமியில் புதுசா ஜென்மம் எடுத்து வாழ்வோம்... வாங்க’’ என்று அவனுடைய கையைப் பற்றிக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கி பயணம் செய்தாள் சிவகாமி.

தொகுப்பு : நீலம் மூன்