Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளாதார நம்பிக்கையை தருகிறோம்!

நன்றி குங்குமம் தோழி

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைப் பயணம் என்பது மிகவும் சவாலானது. எந்தவித குறைபாடும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் சமூகப் பொருளாதார சிரமத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், உடலளவிலும் மனதளவிலும் போராடும் மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பிரச்னைகள் சொல்ல வார்த்தைகள் கிடையாது. அசாத்திய துணிச்சல், திறமைகள் இருந்தும் அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதில்தான் போராட்ட வாழ்க்கை தொடர்கின்றது.

அவர்கள் சம வாய்ப்புகளைத்தான் விரும்புகிறார்கள்... பரிதாபத்தை அல்ல என்கிறார் கோயம்புத்தூர் ‘சந்திரன்ஸ் யுவா அமைப்பின்’ நிறுவனர்களில் ஒருவரான சசிகலா சத்யமூர்த்தி. இவர்களது சேவை நிறுவனமானது ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 15க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான தற்சார்பு பொருளாதார வாழ்க்கையை அமைத்து தருகின்றது.

‘‘நான் ஃபேஷன் டெக்னாலஜி பட்டதாரி. 18 வயதிலேயே திருமணம் ஆயிடுச்சு. திருமணத்திற்குப் பிறகுதான் டிகிரி படித்தேன். என் வாழ்க்கைச் சூழலில் எனக்கு படிப்பு, தொழில் என விரும்பியது எல்லாமே கிடைத்தது. நாங்க சொந்தமாக ‘பிரட் & பட்டர்’ பிசினஸை வெற்றிகரமாக செய்து வருகிறோம். வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எங்களுடைய நீண்ட நாள் விருப்பத்தில் உருவானதுதான் ‘சந்திரன்ஸ் யுவா அமைப்பு’. சமூகத்திலிருந்து எடுத்துக் கொண்டதை சமூகத்திற்கே திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம்தான் தவிர தனிப்பட்ட கதைகள் எதுவும் இல்லை.

சமூகத்தில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட, வாழ்வாதாரத்திற்கு போராடும் மாற்றுத்திறனாளிகள் குறித்து யோசித்தோம். காது கேளாதோர், வாய் பேசாதவர்கள், பார்வை இழந்தவர்கள், கை கால்கள் குறைபாடு உள்ளவர்கள், திருநங்கைகள் ஆகியோரை மையப்படுத்தி உருவானது தான் இந்த அமைப்பு’’ என்றவர் கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களில் தங்களின் அமைப்பு செயல்படுவதாகக் கூறுகிறார்.

‘‘நான் மாற்றுத்திறனாளிகளை கவனித்த வரையில் அவர்களுக்குள் வலிமை, நினைவாற்றல் ஆச்சரியமானது. என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கும் நமக்கும் பொருளாதார நிலையில் தான் பெரிய அளவில் வேறுபாட்டினை பார்க்க முடியும். மற்றபடி அவர்கள் அனைவருமே திறமையானவர்கள்தான். தேவையான பணம் இருந்தால் அவர்களும் யாரையும் சார்ந்து வாழ தேவையிருக்காது. திறமையுள்ள இவர்களுக்கு செல்வாக்கினை சம்பாதிக்க வேண்டிய வழியினை தான் அமைப்பு மூலம் நாங்க ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறோம்.

இது போன்ற சேவை மனப்பான்மை யுடன் பல அமைப்புகள் இயங்கி வருகிறது. அதில் பெரும்பாலான அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சிகளை மட்டுமே வழங்கி வருகிறார்கள். நாங்க பயிற்சி மட்டுமில்லாமல் அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான வழியினையும் அமைத்து தருகிறோம். எங்களின் அமைப்பு மூலம் கூடை முடைதல், தையல், பேக்கரி உணவு தயாரிப்பு, கணினி, ஊதுபத்தி சாம்பிராணி, வீட்டை சுத்தப்படுத்தும் லிக்விட்கள் தயாரித்தல் போன்ற திறன் பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊதியம் வரை கொடுத்து அவர்களுடன் பயணிக்கிறோம். 100% பார்வைத்திறன் இழந்தவர்களுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக எலக்ட்ரானிக் மோட்டார் தையல் இயந்திரங்களை ஆப்ரேட் செய்தல் குறித்து பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினையும் வழங்குகிறோம்.

காலை முதல் மாலை வரை எல்லோரையும் போல் இவர்களும் இயல்பாக பணிக்கு வந்து திரும்புகின்றனர். அவர்களுக்கு சீருடை, அடையாள அட்டை, மதிய உணவு, சிற்றுண்டி, வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு எனஅனைத்து வசதிகளையும் கொடுத்துள்ளோம்’’ என்றவர், மலைவாழ் மக்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளையும் வழங்கி வருவதாகக் கூறுகிறார்.

‘‘எங்களிடம் பயிற்சி முடித்தவர்களுக்கு நாங்க பயிற்சியை மட்டும் வழங்கவில்லை. அவர்கள் பெற்ற பயிற்சிக்கு ஏற்ப தையல் இயந்திரங்கள், தொழில் தொடங்க தேவையான உபகரணங்கள் மற்றும் கை, கால் போன்ற உறுப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு செயற்கை உறுப்பு கருவிகள், வீல் சேர் வழங்குகிறோம்.

திருநங்கை உட்பட எல்லோருக்கும் வருடந்தோறும் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ISR ரன் என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடத்துகிறோம். அதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துகிறோம். கோவையை ‘ஹங்கர் ஃபிரி’ மாவட்டமாக மாற்றும் முயற்சியாக ‘அன்னஸ்தலம்’ என்ற பெயரில் பேருந்து நிலையங்கள் மற்றும் அமைப்பு அருகிலும் ‘கியோஸ்க்’ இயந்திரங்களை நிறுவியுள்ளோம். அதில் தினமும் 150 நபர்களுக்கான முழு சாப்பாடு கிடைக்கும்’’ என்றவர், இதனை அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் மற்றும் நல்லுள்ளங்கள் தரும் நன்கொடைகள் கொண்டு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

‘‘எங்கள் குழு கோயம்புத்தூர் பெண்கள் சிறைக்கும் சென்று அங்குள்ள பெண் கைதிகளுக்கும் திறன் பயிற்சி வழங்கியுள்ளது. பெண் கைதிகள் தண்டனை காலம் முடிந்த பிறகு வந்தாலும் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. சமுதாயம் அவர்களை குற்றவாளிகளாகத்தான் பார்க்கிறது. சந்தர்ப்ப சூழலால் சிறைக்கு சென்றிருந்தாலும் வெளியில் வந்தவுடன் அந்த அடையாளத்துடனே பார்க்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு பேக்கிங், கேட்டரிங் சொல்லிக் கொடுத்து தேவையான சமையல் கலன்கள், ஓவன்கள் வழங்குகிறோம். அவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அன்னஸ்தலத்திற்கு பயன்படுத்துகிறோம். இவர்களை போலவே திருநங்கைகளுக்கும் தையல், பேக்கிங், கேட்டரிங் தொழில்களை கற்றுத் தந்து அவர்கள் சுயதொழில் தொடங்கி நடத்துவதைப் பார்க்கும் போதும் ஒடுக்கப்பட்ட மக்களை கரை சேர்க்கும் பணியில் நாங்க ஈடுபடுவதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

‘‘மாற்றுத்திறனாளிகள் உருவாக்கிய கூடைகள், ஆடைகள், பைகள் எல்லாவற்றையும் சூப்பர் மார்க்கெட் மற்றும் எக்ஸ்போ ஸ்டால்களில் விற்பனை செய்கிறோம். ஸ்டால்களை இலவசமாகவே வழங்குகின்றனர். ஆன்லைன் ஸ்டோர் தொடங்கும் முயற்சியும் நடக்கிறது. இன்ஸ்டாவினை பார்த்து அமெரிக்காவில் இருந்து 100 கூடைகளுக்கான ஆர்டர்கள் வந்தன. ஒரே வாரத்தில் தயார் செய்து அனுப்பிவிட்டோம். சாதாரண ஆட்கள் போடுவதை விட பார்வையற்றோர் போடும் கூடை நேர்த்தியாக நெருக்கமாகவும் இருக்கும். பல நிறங்களில் போடும் போது இந்த கட்டை, இந்த நிறம் என்று சொன்னால் மட்டும் போதும். அவர்கள் நினைவில் வைத்து அழகாக போடுவதை பார்த்து நானே வியந்திருக்கிறேன். இவர்களின் குழுவிற்கு இன்விசிபிள் கலைடாஸ்கோப் என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.

நாங்கள் இரண்டு ஷிஃப்ட்டுகளில் இலவச மருந்துகளுடன் கூடிய மருத்துவ உதவியும் செய்கிறோம். ‘வெல் பியிங்’ என்ற பெயரில் மருத்துவர்களுடன் அந்தக் குழு இயங்குகிறது. எல்லா திறன் பயிற்சிகளுக்கும் தனித்தனியான பயிற்றுநர்கள் இருக்கிறார்கள். தன்னார்வலர்கள் பலரும் இணைந்துள்ளனர்.‘‘அமைப்பு சார்ந்து நடைபெறும் நிகழ்வுக்கு அரசு துறையில் உள்ள உயர் அதிகாரிகளை சிறப்பு விருந்தினராக வரவழைத்து அதன் மூலம் அமைப்பின் இயக்கம் குறித்து தெரியப்படுத்துகிறோம்.

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்விக்கு என தனிப்பட்ட குழு செயல்பட்டு வருகிறது. அவர்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்துகிறோம். கோவையில் தொடங்கிய எங்கள் பயணம் நாடு முழுதும் விரிந்து, இயலாத மக்களுக்கு உற்றத் துணையாக தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே எங்களுடைய பேரெண்ணமாக இருக்கிறது. அனுதாபத்தை விரும்பாத மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதாரத்தில் உயர்ந்த எதிர்கால வாழ்க்கைக்கு நாங்க கேரண்டி’’ என்கிறார் சசிகலா சத்யமூர்த்தி நம்பிக்கையுடன்.

செய்தி: கலைச்செல்வி