Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருநர்கள், அடிப்படை உரிமைகளை பெற உதவுகிறோம்!

நன்றி குங்குமம் தோழி

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் ‘Born to Win’ அமைப்பினர் ஒவ்வொரு வருடமும் திருநர்களுக்கான அழகு போட்டிகளை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான Miss South India Trans Queen Pageant-2026 நிகழ்வு அக்டோபர் மாதம் 5-ம் தேதி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து போட்டியில் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். Born to win அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா, நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

“மிஸ் சௌத் இந்தியா ட்ரான்ஸ் பேஜென்ட் நிகழ்ச்சிக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து திருநர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வி மற்றும் அடிப்படை உரிமைகள் கிடைக்க உதவி செய்யும் நோக்கில், இது போன்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான ஆடிஷன் நடத்தப்பட்டு 13 போட்டியாளர்கள் தேர்வாகி, போட்டியில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் பாலக்காடு ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களுக்கு மேடையில் எவ்வாறு நடக்க வேண்டும், பேச வேண்டும் என 15 நாட்கள் தீவிரப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்போட்டியாளர்களில் பெரும்பாலானோர் 25 வயதிற்குட்பட்டவர்கள். இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த திருநங்கைகளின் கிராமிய கரகாட்டம் உள்ளிட்ட பிரத்யேகக் கலை நிகழ்ச்சிகள் மேடையை சிறப்பித்தன. அத்துடன், ‘நங்கை பப்ளிகேஷன்ஸ்’ சார்பில் ‘வயலட் ஜெண்டர்’ (Violet Gender) மற்றும் ஒரு திருநம்பியின் வாழ்க்கை அனுபவத்தைப் பேசும் ‘இளையவன் என்னும் நான்’ என இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

வெஸ்டர்ன் மற்றும் ட்ரெடிஷ்னல் சுற்றில் 13 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதிச் சுற்றிற்குத் தேர்வான 7 போட்டியாளர்களிடம் சமுதாய விழிப்புணர்வு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் 10 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்ற 13 பேருக்கும் பியூட்டீஷியன் மற்றும் ஃபேஷன் டிசைனிங் போன்ற சுயதொழில் பயிற்சிகளையும் அமைப்பின் சார்பிலேயே வழங்கத் திட்டமிட்டுள்ளோம். திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சம உரிமை, அதிகாரமளித்தல் மற்றும் ஆரோக்கியமாக வாழும் சூழல் போன்றவற்றை ஏற்படுத்தி தருவதே எங்க அமைப்பின் நோக்கம்” என்றார்.

அவந்திகாஸ்ரீ - டைட்டில் வின்னர்

‘‘இறுதிச்சுற்றில் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘உலகிலேயே அதிக சம்பளம் கொடுக்கப்பட வேண்டிய வேலை எது, ஏன்?’ என்ற கேள்வி என்னிடம் கேட்டனர். அதற்கு நான், ‘ஒரு குழந்தையை பெற்றெடுத்து, அதை நல்லபடியாகப் படிக்க வைத்து ஆளாக்கும் தாய்மைதான் உலகிலேயே சிறந்த வேலை. ஒரு தாய் தன் குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் செய்யும் சேவைக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஈடாகாது’ என்று சொல்லி அனைவரின் பாராட்டைப் பெற்றேன்.

இப்போட்டியில் பங்கேற்ற 13 பேருக்கும் தனித்துவமான பட்டங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்கனவே பியூட்டீஷியனாகப் பணியாற்றி வரும் நான், இவர்கள் மூலம் மேலும் ஃபேஷன் டிசைனிங் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது மாடலிங் கனவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

சமுதாயத்தில் தனக்கு எதிராக வரும் சவால்களை எதிர்கொள்ளவும், திறமையை நிரூபித்து வெற்றியாளராக உயரவுமே இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொண்டேன். பெற்றோர்களுக்கு மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். எங்களைப் போன்றவர்களுக்கு குடும்பத்தின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கும் வரை சமுதாயத்தால் அவமானமோ பாதிப்போ நேராது. பெற்றோர்கள் தன் பிள்ளைகளை ஏற்றுக்கொண்டு பாதுகாக்க வேண்டும்.’’

சமீரா - முதல் ரன்னரப்

‘‘ ‘கடந்த காலத்தில் ஒரு விஷயத்தை மாற்ற முடிந்தால் எதை மாற்றுவீர்கள்?’ என்று என்னிடம் கேட்டார்கள். ‘பத்தாம் வகுப்போடு என் படிப்பை நிறுத்திவிட்டேன். அதை எண்ணி வருந்துகிறேன். கல்வியறிவு இல்லாததால் சமூகத்தில் பல்வேறு அவமானங்களையும் நிராகரிப்புகளையும் சந்தித்தேன். கல்விதான் முக்கியம். கடந்த காலத்தில் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால், என்னுடைய கல்வியினை நான் மீண்டும் தொடர வேண்டும் என்பது தான்’ என்றேன். திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த அனைவருமே பட்டதாரிகளாக மாற வேண்டும். அறிவு ஒன்றுதான் உலகில் உண்மையான அழகு.

திருநெல்வேலிதான் என் ெசாந்த ஊர். அமைப்பினர் பியூட்டீஷியன் பயிற்சிக்கான முழு கட்டண உதவியும், ஓட்டுநர் உரிமம் பெறவும் உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். என்னுடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சுத் திறனை பாராட்டி மேடைப் பேச்சுப் போட்டிகளில் வழிகாட்ட உறுதியளித்துள்ளனர்.’’

ஸ்வேதா - இரண்டாவது ரன்னரப்

“கோயம்புத்தூரில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறேன். இறுதிச் சுற்றில், திருநங்கைகள் சந்திக்கும் ‘உடல் கேலி’ (Body Shaming) மற்றும் கிண்டல்கள் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘மற்றவர்கள் செய்யும் கேலிகளும் கிண்டல்களும் எங்களது வெற்றிக்கான முதல் படி. அவர்களின் ஏளனப் பேச்சுக்கள் எங்களது வீரத்திற்கும் தைரியத்திற்கும் ஈடாகாது, கேலி கிண்டல்கள் எதற்கும் உதவாது’ என்று பதிலளித்தேன். நானும் ஃபேஷன் டிசைனிங் படிக்க இருக்கிறேன். இதன் மூலம் எங்களது வாழ்வாதாரத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் பெரிதும் ஆதரவாக இருக்கும். திறமையுள்ள பல திருநங்கைகளை வெளிக்கொண்டு வரும் இந்த அமைப்பின் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்