நன்றி குங்குமம் தோழி
தென்னிந்தியாவில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு, ஏழு வருடங்களில் சர்வதேச அளவில் சான்றிதழ் பெற்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த சக்சஸிற்கு காரணமாக இருப்பவர் பிரியதர்ஷினி. இவர் ‘ரூட் அண்ட் சாயில்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான சருமம் சார்ந்த பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து அதனை இந்தியா முழுதும் விற்பனை செய்து வருகிறார்.
‘‘தென்னிந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அளவில் கிரேட் செய்யப்பட்ட பிராண்ட் எங்களுடையது. அதாவது, எங்களின் தயாரிப்பில் நாங்க எந்தவித ரசாயனங்களும் கலப்பதில்லை மற்றும் குழந்தைகளின் சருமத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தாது என்று சர்வதேச சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.
இப்ப குழந்தைகளுக்கான சருமம் சார்ந்த பொருட்களில் நிறைய பிராண்டுகள் மார்க்கெட்டில் உள்ளது. அதில் பெரும்பாலும் வெளிநாட்டை ேசர்ந்தவை. அப்படி இல்லாமல் நம்மூரில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு மட்டுமே நாங்க குழந்தைகளுக்கான சருமம் சார்ந்த பொருட்களை தயாரித்து கொடுக்க விரும்பினோம். உதாரணத்திற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், கற்பூரவல்லி, துளசி, வேம்பு, மஞ்சள்னு சருமத்தை பாதுகாக்கக்கூடிய நிறைய இயற்ைக பொருட்கள் உள்ளன. அதனை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரூட் அண்ட் சாயில்.
‘‘சொந்த ஊர் சத்தியமங்கலம் என்றாலும், திருமணமாகி கோவையில் செட்டிலாகிட்டேன். நாங்க நெசவு தொழில் சார்ந்த குடும்பம். அதனால் நானும் டெக்ஸ்ைடல் டெக்னாலஜி குறித்து படிச்சேன். திருமணத்திற்குப் பிறகு டெக்ஸ்டைல் துறையில் சில காலம் வேலை பார்த்தேன். பிரபல காஸ்ட்யூம் டிசைனருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த சூழலில் நான் கர்ப்பமானதால், வேலையை தொடர முடியவில்லை.
குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கும் போது, அவ முகத்தில் ஃபங்கல் தொற்று ஏற்பட்டது. அது முதலில் நெற்றியில் ஆரம்பித்து கழுத்து, கன்னத்தில் பரவியது. பார்க்க படர்தாமரை மாதிரி இருந்தது. என்ன சிகிச்சை எடுத்தாலும் சரியாகவில்லை. என் தோழிக்கும் அப்போது தான் குழந்தை பிறந்தது. அவங்க கிட்ட இதுபற்றி சொன்ன போது, அவங்க தேங்காய் தோப்பு வைத்திருந்தாங்க. அதில் விளைந்த தேங்காயில் பால் எடுத்து அதில் எண்ணெய் செய்து கொடுத்தாங்க.
தேங்காய்ப்பாலை காய்ச்சினால் எண்ணெய் வரும். அந்த எண்ணெயைதான் அவங்க எனக்கு கொடுத்து குழந்தையின் முகத்தில் தடவ சொன்னாங்க. இரண்டே நாள்தான் படர்தாமரை இருந்த இடம் காணாமல் போனது. இந்த மாதிரி சிம்பிளான விஷயம் பல மேஜிக் செய்யும்னு அப்பதான் எனக்கு புரிந்தது.
இயற்கை நமக்கு பல மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை கொடுத்துள்ளது. நாம் அதை சரியாக பயன்படுத்துவதில்லை. அதன் முழுமையான பயன்பாடு என்ன என்று முறைப்படி தெரிந்து கொள்ள விரும்பினேன். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நியூபார்ன் கேர் குறித்த சிறப்பு பயிற்சியினை ஆன்லைனில் மேற்கொண்டேன். குழந்தைகளுக்கு என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும்...
எது அவசியமில்லை என்று கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கெண்டதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தேன். இந்தியாவில் குழந்தைகளுக்கான சரும பொருட்களுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதை உணர்ந்தேன்’’ என்றவர், இயற்கையில் உள்ள வளங்களைக் கொண்டு அவர் தயாரிக்கும் பொருட்கள் குறித்து விவரித்தார்.
‘‘பச்சைப்பயறு, ஆவாரம்பூ, செம்பருத்தி, கடலைமாவு என பல பொருட்கள் ேசர்த்து நலங்கு மாவு கொண்டு நம் முன்னோர் குழந்தையை குளிப்பாட்டுவாங்க. குழந்தையின் சருமம் பொலிவா இருக்கும். வயிறு வலிச்சா விளக்ெகண்ணெயில் ஓமம் சேர்த்து காய்ச்சி தடவுவாங்க. இப்படி நிறைய இருக்கு. இதைப்பற்றி எல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய ஆரம்பித்து, முதலில்
தேங்காய்ப்பால் எண்ணெயைதான் அறிமுகம் செய்தோம்.
சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைத்தோம். 10 பாட்டில் விற்பனையாவதே பெரிய சவாலா இருந்தது. ஆனால், ஒருமுறை வாங்கியவர்கள் அதை தொடர்ந்து வாங்க ஆரம்பித்தார்கள். பிசினஸை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த காஸ்மெடிக் பார்முலேஷன் குறித்து படித்தேன். எண்ணெயை தொடர்ந்து டயப்பர் ராஷசுக்காக தேங்காய் எண்ணெயை கிரீம் வடிவில் மாற்றி அமைத்தோம். மேலும், மசாஜ் ஆயில், பேபி சோப், பாடி வாஷ், மாய்சரைசர், சளிக்கான ரோலான், கொசு கடிக்கு கிரீம், சருமத்தில் பூச்சி கடிச்சா அதுக்கான கிரீம் என குழந்தைகளின் தேவை ஒவ்வொன்றையும் அறிந்து தயாரித்தோம். இதில் முக்கியமானது எந்தவித ரசாயனங்களும் பயன்படுத்துவதில்லை என்பதுதான்.
பொதுவாக குழந்தைகளின் சருமம் மிருதுவாக இருக்கும். அதனால் எந்த பொருட்கள் அவர்களின் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று ஆய்வு செய்தோம். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு வேர்க்குரு வந்தால் கிரீம் போடணும்னு அவசியம் இல்லை. இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், அதுவே சருமத்தில் ரேஷஸ் ஏற்பட்டால் அதற்கு கிரீம் வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ய அலோபதி டாக்டர், நேச்சுரோபதி டாக்டர் என தனிப்பட்ட குழு அமைத்திருக்கிறோம்.
முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை பொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். அதாவது, கற்பூரவல்லி சளிக்கு நல்லது. ஆனால், அது தவிர அதில் வேற என்ன மருத்துவ குணங்கள் உள்ளதுன்னு ஆய்வு செய்வோம். செவ்வந்தி சருமத்திற்கு நல்லது. தாமரைப்பூ, ரோஜாப்பூ, அதிமதுரம், பச்சைப்பயறு என ஒவ்வொன்றாக ஆய்வு செய்து அதனை பயன்படுத்துகிறோம். சிலர் ஓட்ஸ் மில்க் குழந்தைகளின் சருமத்திற்கு நல்லதுன்னு சொல்வாங்க. ஆனால், அதைவிட சிறந்தது நம்மூர் தேங்காய்ப்பால் எண்ணெய். நம்மூரில் நிறைய அற்புதமான விஷயங்கள் இருக்கிறது’’ என்றவர் சான்றிதழ் பெறுவதற்காக பல சிக்கல்களை சந்தித்துள்ளார்.
‘‘சர்வதேச சான்றிதழ் மட்டுமில்லை... நம்மூர் FDAவிற்காக விண்ணப்பித்த போதும் பல சிக்கல்களை சந்தித்தோம். பொதுவா குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் என்னென்ன சேர்த்திருக்கிறோம் என்று குறிப்பிட வேண்டும். இதற்கு BIS என்ற புத்தகம்தான் கைட்லைன். அதில் மூலிகைப் பொருட்கள் குறித்த விவரங்கள் இருக்கும். ஆனால், நம்மூர் மூலிகையான கற்பூரவல்லி, ஆடாதொடா, செவ்வந்தி, ஆவாரம்பூ, குப்பைமேனி பற்றி அதில் இல்லை. அதனால் எங்களின் தயாரிப்பு நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு நாங்க அந்த மூலிகைகள் குறித்து விவரிப்போம். இந்த மூலிகைகள் உள்ளது என்று அவர்களுக்கு புரிய வைத்த பிறகுதான் ஏற்றுக் கொண்டு சான்றிதழ் வழங்கினாங்க. அதேபோல் FDA சான்றிதழ் இருந்தால்தான் அழகு சாதனப் பொருட்களை இந்தியாவில் விற்க முடியும்.
தற்போது கோவையில் ரீடெயில் ஸ்டோர் இருக்கு, சென்னை மற்றும் பெங்களூரில் இதேபோல் ஒன்றை திறக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆன்லைன் மற்றும் அமேசான் போன்ற விற்பனை தளங்களிலும் எங்களின் பொருட்கள் விற்பனையில் உள்ளது. எங்களின் இணையம் மற்றும் இன்ஸ்டாவில் (www.instagram.com/rootandsoil.in) பொருட்களை பெறலாம். நம்ம பாட்டி காலத்தில் சின்னச் சின்ன வீட்டு வைத்தியங்கள் கொண்டுதான் குழந்தையை வளர்த்தாங்க. அதை இன்று பெற்றோர்களால் செய்ய முடியாது. அதை நாங்க தரமான மற்றும் எளிதில் பயன்படுத்தும் முறையில் கொடுக்கிறோம்.
தொழில் துவங்க பணம் அவசியம் என்றாலும், நல்ல ஐடியா மற்றும் தரமான பொருட்களுக்கு என்றுமே மார்க்கெட் உள்ளது. முதலில் குறைந்த முதலீட்டில் துவங்கி அதன் பிறகு அதனை இரட்டிப்பாக்கலாம். இதற்கு கடுமையான உழைப்பு அவசியம். போட்டி நிறைந்த மார்க்கெட்டில் நம்முடைய பொருள் தனித்திருக்க உழைக்க வேண்டும்’’ என்றார் பிரியதர்ஷினி.
தொகுப்பு: ஷன்மதி



