நன்றி குங்குமம் தோழி
வீட்டை அலங்கரிக்க பல பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் குறிப்பாக மரச்சாமான்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கொண்டு அலங்கரித்தால் வீடு பார்க்க அழகாக மட்டுமில்லாமல் ரிச் லுக் தரும். அப்படிப்பட்ட மரத்திலான அழகான கைவினை மற்றும் அலங்காரப் பொருட்களை அவரே வடிவமைத்து தயாரித்து விற்பனை செய்து வருகிறார் திருச்சியை சேர்ந்த நிவ்யா. இவர் ‘பிரைட்பாக்ஸ்’ என்ற பெயரில் அழகான மர அலங்காரப் பொருட்களை விற்பனை செய்கிறார்.
‘‘நான் இந்த பிசினஸை 2010ல் ஆரம்பிச்சேன். அப்ப நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கும் போதே ஏதாவது பிசினஸ் செய்யணும்னு விரும்பினேன். அப்படித்தான் இதை ஆரம்பிச்சேன். இப்ப திருச்சியில் இரண்டு ஷோரூம், ஒரு வேர்ஹவுஸ் இருக்கு. எங்களின் தனித்துவம் ஒரு வீட்டின் நுழைவு வாசல் முதல் அலங்காரப் பொருட்கள் மற்றும் கிச்சனுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் விற்பனை செய்கிறோம். சொல்லப்போனால் வீட்டிற்கு அழகு சேர்க்கும் செட்டிநாடு ஊஞ்சல், கட்டில், சோபா அதில் பூஜை அறை என அனைத்தும் அழகாக அமைத்து தருகிறோம். முழுக்க முழுக்க மரச்சாமான்களை மட்டுமே டிசைன் செய்து தருகிறோம்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் கடை அமைத்து அதில் கைவினைப் பொருட்களை தான் விற்பனை செய்து வந்தேன். அதாவது, பேப்பர் மேஷ் பொருட்கள், சின்னச் சின்ன மரச்சாமான்கள். இதனை நாங்களே தயாரித்து கொடுத்ததால், மக்கள் எங்களிடம் கஸ்டமைஸ் செய்ய சொல்லி கேட்டாங்க. அப்படித்தான் படிப்படியாக ஒவ்வொரு பொருளாக நாங்க தயாரிக்க, இப்ப எங்களின் கடை முழுக்க முழுக்க வீடுகளுக்கு மர இன்டீரியர் செய்யக்கூடிய பிராண்டாகவே மாறிடுச்சு. அதாவது, இப்போது வரவேற்பறை, சமையல் அறை என தனித்தனியாக அழகுப்படுத்தி
தருகிறோம்.
என்னுடைய அம்மா தஞ்சாவூர் மற்றும் கொலு பொம்மைகளை பேப்பர் மேஷில் வடிவமைப்பாங்க. அவங்க தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கைவினைக் கலைஞர். அவங்க ெபாம்மை செய்து, அதை மொத்த விற்பனையா கொடுத்து வந்தாங்க. நான் அதையே ரீடெயில் முறையில் விற்பனை செய்து வந்தேன். படிச்சு முடிச்ச பிறகு இது குறித்து தனிப்பட்ட பயிற்சி மேற்கொண்டேன். அதன் பிறகு மரச்சாமான் பொருட்களை விற்பனை ெசய்ய திட்டமிட்டேன். அதை கலைஞர்களுடன் இணைந்து தயாரிக்கவும் செய்தேன்.
எங்களுக்கு சொந்தமா மரப்பட்டறை இருக்கு. என் தாத்தா காலத்தில் இருந்தே மரப்பட்டறை பிசினஸை பரம்பரை பரம்பரையா செய்து வராங்க. என் உறவினர்கள் பலர் இந்தத் தொழிலில்தான் ஈடுபட்டு வராங்க. அவங்க பாரம்பரிய பொருட்களான பீரோ, கட்டில் போன்றவற்றை செய்து வராங்க. நான் அதில் வித்தியாசமா இருக்கணும்னு வீட்டை அலங்கரிக்கும் செட்டிநாடு மரச்சாமான்களை டிசைன் செய்ய ஆரம்பித்தேன். எல்லோருடைய வீட்டிலும் சாதாரண மரப்பொருட்கள் இருக்கும். அப்படி இல்லாமல் ப்யூஷன் முறையில் நவீன கலைநயத்துடன் இருக்க வேண் டும்னு விரும்பினேன். அதில் முதல் முறையாக நான் அமைத்தது பூஜை அறை தான்.
ஆனால், பூஜை அறை போல் இல்லாமல், ஒரு சுவரில் கோபுரம் வைத்து அதையே ஒரு பூஜை அறையாக வடிவமைத்தேன். நான் செய்ததை இன்ஸ்டாவில் பதிவு செய்தேன். அதைப் பார்த்துதான் எனக்கு வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிச்சாங்க. சிலர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்ய சொல்லி கேட்டார்கள்’’ என்றவர், ஒவ்வொரு மரச்சாமான்களையும் அவரே டிசைன் செய்து தருகிறார். ‘‘ஆரம்பத்தில் டிரையல் அண்ட் எரர் முறையில்தான் எங்களின் பொருட்களை படைக்க ஆரம்பித்தோம். உதாரணத்திற்கு விநாயகர் சிலை பல வடிவங்களில் இருக்கும். ஒவ்வொரு வடிவமாக அமைத்தோம். விநாயகரில் ஆரம்பித்து முருகன், பெருமாள், சரஸ்வதி, லட்சுமி என அனைத்தும் வடிவமைக்க துவங்கினோம்.
மேலும், என்னுடைய மாமாவிற்கு ஆர்கிடெக்ட் தொழில். அவருக்கு வரும் பிராஜட்களை எனக்கு தருவாங்க. நான் டிசைன் செய்ததை இணையத்தில் பதிவு செய்தேன். அதைப் பார்த்து எனக்கான வாடிக்கையாளர்கள் வந்தாங்க. அவங்க சில விஷயங்களை கேட்க அப்படியே ஒவ்வொன்றையும் கஸ்டமைஸ் செய்ய ஆரம்பித்தேன். நாங்க டீக்வுட், ரோஸ்வுட், மகோகமியில்தான் மரப்பொருட்களை வடிவமைக்கிறோம். பிளைவுட் பயன்படுத்துவதில்லை. இது மட்டுமில்லை ஒரு வீட்டை முழுக்க முழுக்க அலங்கரிக்க சொல்லியும் எங்களிடம் வருகிறார்கள். அதையும் நாங்க செய்து தருகிறோம். அதற்காக தனிப்பட்ட குழுவினர் உள்ளனர். நாங்க வீட்டை அலங்காரம் மட்டுமே செய்கிறோமே தவிர கிச்சன் கப்போர்ட்கள் எல்லாம் வடிவமைப்பதில்லை.
முதலில் வீட்டின் அமைப்பினைப் பார்த்து அதில் எந்த இடத்தில் எதைக் கொண்டு அலங்கரிக்கலாம்னு நாங்க வாடிக்கையாளர்களுடன் ஆலோசனை செய்வோம். திருச்சியில் உள்ளவர்கள் என்றால் நேரடியாக சென்று அதற்கு ஏற்ப செய்து தருகிறோம். மற்ற ஊர்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் வடிவமைத்து தருகிறோம்’’ என்றவர், அவர் சந்திக்கும் சிக்கல்களை எடுத்துரைத்தார்.
‘‘இந்தத் தொழிலுக்கு அளவு ரொம்ப முக்கியம். நாங்க ஆப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் கஸ்டமைஸ் செய்வதால், ஒரு இஞ்ச் தவறுதலா குறிப்பிட்டாலே மறுபடியும் அந்தப் பொருளை முதலில் இருந்து செய்ய வேண்டும். அவ்வாறு பொருந்தாமல் போகும் பொருட்களை நாங்க எங்க ஷோரூமில் ரெடிமேட் பொருட்களாக விற்பனைக்கு வைத்திடுவோம். நாங்க கஸ்டமைஸ் மட்டுமில்லாமல் ரெடிமேடாக சில பொருட்களை விற்பனையும் செய்வதால், செய்த பொருள் வீணாகாது.
அதே சமயம் ஒரே வேலையை இரண்டு முறை செய்ய வேண்டும் என்பதால் நேரம் விரையமாகும். அடுத்த பிரச்னை ஷிப்பிங். நாங்க உலகளவில் ஷிப்பிங் செய்கிறோம். இது மரப்பொருட்கள் என்பதால் எடை அதிகம், கட்டணமும் கூடுதலாக இருக்கும். சில சமயம் உடைந்து போக வாய்ப்புள்ளது. அதனால் ஷிப்பிங் செய்யும் போது கவனமாக இருக்கிறோம். தற்போது திருச்சியில் மட்டுமே இரண்டு கிளைகள் உள்ளன. இதை நல்ல முறையில் வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு’’ என்றார் நிவ்யா.
தொகுப்பு : ஷன்மதி


