நன்றி குங்குமம் தோழி
வாழ்வியல் அத்தியாயங்களில் ஓவியங்கள் உன்னதமான கலைப்படைப்பு என்று முன்மொழிகிறார் ஓவியர் முத்து கோமதி. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் புகழ்பெற்ற ஓவியர் முருகபூபதியின் மகளாவார். ‘‘நான் M.A,B.Ed. ஆங்கில இலக்கியம் படித்து விட்டு ஒரு தனியார் கல்லூரியில் இரண்டு வருடம் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறேன். எனது சிறுவயதில் என் தந்தையார் பல்வேறு ஆன்மீகத் திருத்தலங்களின் வரலாறுகளை வண்ண ஓவியங்களாக வடிவாக்கம் செய்வதை நான் மிகவும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டே இருப்பேன்.
அந்த அனுபவமே என்னை ஓவியராக உருவெடுக்க முக்கியத் தூண்டுகோலானது.சிறுவயது முதலே ஓவியப் போட்டிகள், கலைக் கண்காட்சிகளில் பங்கேற்று மாவட்டம், மாநில அளவிலான ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, வாட்டர் கலர், ஆயில் பெயின்டிங் மற்றும் அக்ரிலிக் உள்ளிட்ட அனைத்துவிதமான வண்ண ஊடகங்களிலும் சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கி வருவதோடு, மாணவ, மாணவிகளுக்கும் ஓவியப் பயிற்சிகளும் வழங்கி வருகிறேன்.
மேனகா, பாமா-ருக்மணி தஞ்சாவூர் பெயின்டிங், திருப்பதி படம் எனாமல் ஒர்க் மற்றும் ஜூவல் ஓவியங்களாகவும் நாலுக்கு மூணடி என கிராமத்துச் சூழலில் மனிதர்கள், இயற்கை காட்சிகள் என்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்திருக்கிறேன்.என் தந்தையின் வழியில் பாரம்பரிய ஓவியக் கலையை பாதுகாப்பதோடு, அடுத்த தலைமுறைக்கும் அதைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன்.
அப்பா பூபதி ஆர்ட்ஸ் என்ற ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றை கோவில்பட்டியில் வைத்திருந்தார். அது தான் தற்போது என்னுடைய கலைக்கூடமாக அமைந்திருக்கிறது. அவர் எனக்குள் விதைத்த அந்த அன்பும் கலை தாகமும்தான் என்னை கடந்த பத்து வருடங்களாக நீர்வண்ணங்கள், ஆயில் பெயின்டிங் என பல்வேறு கலை வடிவங்களில் தீவிரமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், அப்பா நடத்தி வரும் கொண்டைய ராஜூ ஓவியப் பள்ளியின் முதல்வராகவும் அதன் அமைப்பின் இணைச் செயலாளராகவும் இயங்கி வருகிறேன்.
ஓவியம் வரைதல் தியானத்திற்கு ஈடானது. மனதிற்குள் ஆழ்ந்த அமைதியையும், யோசிக்கும் திறனையும் அதிகரிக்கும். ஓவியம் வரையும் போது செலுத்தும் ஆழ்ந்த கவனம் தூரிகையின் ஒவ்வொரு அசைவிலும் அழகாகவும் துல்லியமாகவும் வெளிப்படும். ஓவியம் வரைவதற்கு ஆண், பெண் என்ற எந்த பாலின பாகுபாடும் கிடையாது. தனி நபர்களின் வாழ்க்கை அனுபவங்களையும், அவர்களது திறமையையும் பொறுத்தே அவர்களது ஓவிய பாணி மாறுபடும்.
நம் மாணவர்கள் அவசியம் ஓவியம் கற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களது பார்வை கோணத்தையும், ரசிக்கும் திறனையும் மாற்றக்கூடிய திறன் கொண்டது. உலகின் ஆதி மனிதன் ஓவியங்களை கொண்டுதான் தகவல் பரிமாற்றங்களை செய்து வந்தான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமனிதன் குகைகளில் தன் ஓவியங்கள் மூலம் பயம், மகிழ்ச்சி, வேட்டை அனுபவங்கள் மற்றும் எண்ணங்களையும் பதிவு செய்திருக்கிறான். ஓவியங்கள் நம் வாழ்க்கையில் சுற்றியுள்ள சக மனிதர்களை இன்னும் அழகாக புரிந்து கொள்ள உதவுகிறது’’ என்ற முத்து கோமதி, தன் தந்தை வழியில் ஓவியப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதே முக்கிய நோக்கமாக செயல்பட்டு வருகிறார்.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்


