நன்றி குங்குமம் தோழி
பலர் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால், சென்னையை சேர்ந்த கனிமொழி தன் கணவருடன் இணைந்து தன்னால் முடிந்த உதவியினை வருடம் முழுதும் செய்து வருகிறார். குறிப்பாக பெண்களின் மேம்பாட்டிற்காக தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சென்னையை சேர்ந்த இவர் லைஃப் குரூப் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மட்டுமில்லாமல் வீட்டு உபயோகப் பொருட்கள், புடவை என பல பிசினஸை தன் கணவருடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.
‘‘நாங்க தனிப்பட்ட முறையிலும் மேலும் மற்ற NGO அமைப்புகளுக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். குறிப்பாக பெண்களின் மேம்பாட்டிற்காக அவர்களின் திறன் சார்ந்த பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். ஒரு பக்கம் பெண்களுக்கு இதுபோல் உதவியினை செய்து வருகிறோம். அதே சமயம் வயதானவர்கள் மற்றும் வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வாரம் ஞாயிறு மட்டும் மதிய வேளை உணவினை வழங்கி வருகிறோம்.
இவை தவிர முதியோர் இல்லத்திற்கும் உணவுகளை கொடுக்கிறோம். மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆரம்பிக்கும் முன் பாட நோட்டுப் புத்தகங்களை வழங்கி வருகிறோம். சிலர் தங்களின் தேவை இது என்று குறிப்பிட்டு கேட்பார்கள். அது என்ன என்று அறிந்து அதற்கு ஏற்பவும் நாங்க செய்து தருகிறோம்’’ என்றவர், இதற்காக தனிப்பட்ட நபர்கள் யாரிடமும் உதவியினை பெறுவதில்லை.
‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் வேலூர்தான். MBA முடிச்சிருக்கேன். வேலைக்காக சென்னைக்கு வந்தேன். திருமணத்திற்குப் பிறகு வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் புடவை விற்பனை மற்றும் ஆரி வேலைப்பாடு பிசினஸ் செய்தேன். என் கணவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்துதான் நான்கு வருடமாக நானும் என் கணவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறோம்.
என் கணவரின் அப்பா கட்டிட வேலையில் இருந்தார். வீடுகளுக்கு ஜன்னல் வைக்கும் வேலை. அப்போது என் கணவருக்கு எட்டு வயசு. பள்ளி விடுமுறையின் போது அப்பாவுக்கு உதவ செல்வார். அந்தக் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் இல்லை. சாரம் கட்டி தான் வேலை செய்வாங்க. வீடுகளுக்கு பேப்பர் மற்றும் பால் பாக்கெட் போடுவார். கொரியர் வேலை, ேகாயம்பேடு மார்க்கெட்டில் மூட்டைகளை கடைகளுக்கு போடுவார்.
இந்த வருமானம் பெரிய விஷயம். சாப்பாட்டுக்கு செலவு செய்யாம டீ மட்டுமே சாப்பிடுவார். எங்க திருமணத்திற்கு பிறகும் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். என் குழந்தைக்கு ஒருநாள் ஒரு வேளை சாப்பாடு ெகாடுக்க முடியாது. குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க முடியாத அந்த வலி சொல்ல முடியாது. அதனால்தான் சின்னவர்களோ பெரியவர்களோ ஒரு வேளை நல்ல சாப்பாடு கொடுக்கணும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எங்களால் முடிந்தளவு உதவி செய்கிறோம். எங்க கையில் ரூ.100 இருந்தா அதில் ரூ.30ஐ யாருக்காகவும் கொடுத்து உதவ வேண்டும்னுதான் இதை செய்ய ஆரம்பிச்சோம்’’ என்றவர் ரியல் எஸ்டேட்டை தொடர்ந்து வீட்டு உபயோகப் பொருட்கள், புடவை பிசினஸ் என ஒவ்வொரு தொழிலாக ஆரம்பித்துள்ளனர்.
‘‘நாங்க இப்ப சொந்தமா தொழில் செய்து நல்ல நிலையில் இருந்தாலும், இந்த இடத்திற்கு வரும் முன் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறோம். பிசினஸில் ஒரே நாளில் வளர்ச்சி அடைய முடியாது. பிசினஸ் வளர வளர நாங்களும் எங்களின் சேவையினை ஒவ்வொன்றாக துவங்கினோம். ஒரு வேளை சாப்பாட்டுக்காகத்தான் நாம் உழைக்கிறோம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வேளை நல்ல உணவு வழங்க நினைத்தோம்.
எங்க அலுவலக வாசலில் முதலில் பத்து பேருக்கு கொடுத்தோம். அதைப் பார்த்து மற்றவர்கள் வர ஆரம்பித்தாங்க. ஞாயிறு மதியம் சாப்பாடு பரிமாறும் நேரத்திற்கு முன்பே 200 பேர் காத்திருப்பாங்க. எங்க அலுவலகம் கீழே ஷெட் அமைத்து அங்கு இலை போட்டு பரிமாறுகிறோம். சாம்பார் சாதம், வெஜ் பிரியாணி, தக்காளி சாதம்... மாதம் ஒருமுறை சிக்கன் பிரியாணி என வாரம் ஒரு உணவு இருக்கும். இதுக்காக நாங்க யாரிடமும் உதவிக் கேட்டதில்லை. எங்களால என்ன முடியுமோ அதை செய்கிறோம். இன்னும் நிறைய பேருக்கு கொடுக்கணும்.
இப்போது நிறைய அமைப்புகள் இயங்கி வருது. அதில் ஒரு சிலர்தான் உண்மையா உழைக்கிறாங்க. எங்களுக்கு ஒரு தனிப்பட்ட குழு உள்ளனர். அவர்கள் மூலமாக உதவி கேட்பவர்களின் தேவைக்கேற்ப பொருளாக வாங்கி நேரடியாக தருகிறோம். பணமாக கொடுப்பதில்ைல. காரணம், காசாக கொடுக்கும் போது முழுமையாக அவர்களுக்கு சேருமான்னு தெரியாது. அதனால்தான் குழந்தைகளுக்கு புத்தகம், வயதானவர்களுக்கு நைட்டி, முதியோர் இல்லத்திற்கு தேவையான உபகரணங்கள், உணவுப் பொருட்கள் என்று வழங்குகிறோம். இந்த எண்ணிக்கை அதிகரிக்கணும்... அதுதான் எங்களின் கனவு’’ என்றார் கனிமொழி.
தொகுப்பு: நிஷா




